திங்கள், அக்டோபர் 28, 2013

சாப்பிட்டுப் போங்கோ.....!


"நாளைக்கு மீற்றிங்' என்ற தகவலோடு இன்று தான் பல அலுவலகங்களுக்கு கடிதம் வந்து சேர்ந்தது. முக்கிய கலந்துரையாடல் இருப்பதால் சம் பந்தப்பட்ட அனைவரையும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் அன்று அந்தக் கடிதத்தில் குறிப் பிடப்பட்டிருந்தது.

பலவருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி தற்போதுதான் ஆசிரிய உதவியாளர் களாக மிகக்குறைந்த கொடுப்பனவுடன் உள்வாங் கப் பட்டவர்கள், சமுர்த்தி ஊழியர்கள்,அலுவலக பணியாளர்கள் என்று அனைவருக்கும் இந்த அவசர அறிவிப்பு அந்தந்தப் பிரிவுகளின் ஊடாக அனுப் பப்பட்டிருந்நது.
புதிதாக நியமனம் பெற்றவர்கள் என்பதால் கட்டாயம் அந்த "மீற்றிங்கில்' கலந்துகொள்ள வேண் டிய  ஏற்பட்டது. காரணம் "வேலை இல்லாமல் செய்துபோடுவினம்' என்ற பயம் தான்.
"இவ்வளவு காலமா கஸ்ரப்பட்டு ஒரு வேலை கிடைச்சிருக்கு. அதையும் இப்பிடி ஏதும் சாட்டா வைச்சு பறிச்சிட்டா அதோ கதிதான்'
இந்த ஏக்கத்தோடு இரவோடிரவா வெளிக் கிட்ட பாதிப்பேர், விடியக்காலம வெளிக்கிட்ட பாதிப்பேர் என்று ஒரு அறுநூறுபேருக்கு மேலான வர்கள் குறித்த இடத்துக்கு வந்து சேர்ந்திட்டினம்.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப் பாணம் என்று தூர இடங்களில்  இருந்து இவர் கள் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அவசரக் கூட்டம் எண்டதால பலபேரது நினைப் பும் பேச்சும் "இது தேர்தல் மீற்றிங்' எண்டு தான். ஆனால் கூட்டத்தில எந்த அரசியல்வாதியும் கலந்து கொள்ளவில்ல. அதைவிட அரசியலும் கதைக் கல்லை. இதுதான் ஏற்பாட்டாளர்களது கெட்டித்தனம்.
போன வாரம் நவிப்பிள்ளைக்கு காட்டத் தயா ரிச்ச அபிவிருத்தி அறிக்கைகளைதான் இவர்களுக் கும் போட்டுக்காட்டி, பாருங்கோ நாட்டில எவ்வளவு அபிவிருத்தி வேலையள் நடந்து கொண்டு இருக்கு எண்டுறதுக்குத் தான்  இந்த மீற்றிங்.
வடக்கில் புதிதாகநியமனம் பெற்றுக்கொண்ட வர்களுக்கான கலந்துரையாடலே அது. கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் வடக்கு ஆளுநர் தலைமையில் தான் கூட் டம் நடைபெற்றது. வடக்குக் கான அரச அதிகாரிகளும், அமைச்சு அதிகாரிகளும் கலந்துகொண்டு தத்தமது அமைச்சு, திணைக்களங் களில் நடந்த, நடந்து கொண்டிருக் கும் அபிவிருத்தி வேலைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இடையிடையே ஆளுநர் வந்து ""உங்கள் எல்லாருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கு கட்டாயம் சாப்பிட்டுட்டு போங்கோ'' எண்டு அறிவிச்சாராம்.  பெரிய கைதட்டல் ஆரவாரம் அவருடைய அறிவிப்புக்கு.
ஒருமாதிரி கூட்டம் முடிஞ்சுது. அதிகாரிகள் வெளி யேறி விட்டனர். அவசர அவசரமாக மேடைக்கு வந்த ஒருவர் ""யாழ்ப்பாணத்தில இருந்து வந்தவை யளுக்கு சாப் பாடு ஒழுங்குபடுத்தேலை. நீங்கள் வீட்டைபோய் சாப்பிடுங்கோ. வெளிமாவட்டத் தில இருந்து வந்த எல்லாருக்கும் சாப்பாடு இருக்கு'' என்று அறிவித்தார். அறிவிப்பை கேட்டதும் யாழ்ப் பாணத்தில இருந்து வந்த எல்லோரும் வீட்டுக்கு புறப்பட வெளி மாவட்டக்காரருக்கு, ""கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ சாப் பாடு வந்திடும்'' எண்டு தகவல் கொடுத்திருக்கினம். ஒருமணி, ஒன்றரை, இரண்டு என்று நேரம் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் சாப்பாடு தான் வந்த பாடாக இல்லை.
 தூரத்தில இருந்து முதல்நாளே வந்தவை, அதிகாலை வெளிக்கிட்டவை என்று பலபேர்.... பொறுமை இழந்து கூட்டம் கூட்டமாகப் புறப்பட ஆரம்பித்தனர்.
அப்பாடா !கொஞ்ச நேரத்தில கூட்டம் கலைஞ் சிட்டுது. ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க சந்தோசம். ஒருமாதிரி ஏமாத்தி அனுப்பிட்டம் எண்டு.
யாழ்ப்பாணம் பஸ்ரான்ட் வரை ஓட்டோக் கள், தனியார் பஸ்களில் தாவி வந்து சேர்ந்த பலர் கூட்டம் கூட்டமாக ஏதோ பேசிக் கொண்டிருந் திச்சினம். அதில எனக்கு அறிஞ்ச ஒருத்தரும் இருந்தார். ""அண்னை என்னாச்சு.என்ன இந்தப் பக்கம்?'' எண்டு கதையக் குடுக்க..
""நாங்கள் ஆளுநற்ர மீற்றிங்குக்கு வந்தனாங்க. ஊருக்குப்போக நிக்கிறம்.கூட்டத்தில சாப்பாடு தாறம் தாறம் எண்டு அறிவிச்சாங்கள். தரல்ல. அதுதான் எங்கட ஆக்களின்ர அறிவிப்புக்கள் எப்பிடி எண்டு பெடியளோட கதைச்சுக்கொண்டு நிண்டன். தம்பி இதை பேப்பரில எழுதிடாதை. வெக்கக்கேடு எங்களுக்குத் தான்'' சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறிப்புறப்பட்டுவிட்டார் அவர்.
பாத்தீர்களா  இந்த விருந்தோம்பல் பண்பை. கிடைச்சா எங்களுக்கு இப்பிடி  இன்னும் கொஞ்சபேர் கிடைக்கணும். நல்லா வருவீங்கள். போங்கோ.

நன்றி சுடர்ஒளி11 -17.09.2013

Post Comment

கருத்துகள் இல்லை: