திங்கள், அக்டோபர் 28, 2013

சில்லறைச் சண்டை


அவரது முகத்தைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது.வாய் திறந்து கேட்பதற்கு வெட்கம்.போய்ச் சேரும்வரை மனசுக்குள் சில்லறைச்சண்டை. கடைசிவரை பிரச்சினை தீரவில்லை. யாழ்ப்பாணம் தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்ட பஸ்.கிளி நொச்சிக்கு செல்கிறது. நானும் கிளிநொச்சி செல்லவேண்டும். 93 ரூபா ரிக்கற். நூறு ரூபா கொடுத்தேன். எனக்கு அருகில் இருந்தவரும் அப்படித்தான். ஆனால் அவருக்கு பத்து ரூபா திருப்பிக் கொடுக்கப்பட்டது.

எனக்குத் தரப்படவில்லை.சரி இல்லையாக் கும் தருவார் என்ற நம்பிக்கை.போய்ச் சேரும் வரை அவர் சிட்டை எழுதுவதற்காக அங்கும் இங்கும் சென்றுவந்தார். அப்போதெல்லாம் அவரது முகத்தைப் பார்த்தேன். ஞாபகப்படுத்தலுக்காக. ஆனால் அவர் நினைப்பில் அந்த சில்லறை இல்லை. அவருக்கு 7 ரூபா லாபம். எனக்கு ஏழு ரூபாவுடன் "ரிக்கற்' போட்டது முதல் இறங்கும் வரையான நேரம் வரை சிந் தனைகளும் நட்டம்.
திரும்பி வரும்போது இ.போ.ச.பஸ்.92ரூபா டிக்கற்.100ரூபா கொடுத்தேன். 10ரூபா தந்தார். அவருக்கு 2 ரூபா நட்டம்.

கடைகளிலும் இதே நிலை

இப்படித்தான் தினமும் நாம் நுகரும் பொருள்களுக்கான மீதிப்பணம் வழங்கப் படுவதில்லை. அல்லது மேலதிகமாக நாமே பெறுமதி இழக்க நேரிடுகின்றது. பொதுப் பாவனையில் சில்லறைக் காசுகள் புழக்கத்தில் இல்லாததால் நுகர்வோரும் அதை எடுத்துச் செல்லவோ, மீளப் பெறவோ விரும்புவதில்லை. இதனால் கடைக்காரரை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. விலைப் பதிப்புக்களும் தந்திர மானவை. சில்லறைப்பணத்தை கொள்ளையடிப்பதாகவே அவை அமைகின்றன.
இப்போதெல்லாம் சட்டைப்பையில் இப்போது ஒரு ரூபா கிடந்தாலும் கனமாக இருக்கிறது. எப்படியாவது அதை அகற்றுவதே சிந்தனை. ஒருலட்சம் ரூபாவை 20 தாள்கள் மட் டும் நிரப்பிவிடுகின்றன. அப்படியானால் சாதாரண சட்டைப்பையே 5 லட்சம் ரூபாவை யாருக்கும் தெரியாது வெளியில் எடுத்துச் செல்ல உதவியாக இருக்கிறது. பட்டப்பகலில் உயிருடன் இருக்கும் ஒருவரது காதுகளை அறுத்து கொள்ளையடிக்கும் ஊரில் அரசின் நாணயத்தாள் அச்சிடும் உத்தி பாராட்டுக்குரியது. ஆனால் போலி??

வியாபார உளவியல்

மனித நடத்தை உளவியலுக்கு அப்பால் இன்று மனிதர்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் வர்த்தக உளவியல் மேலோங்கியிருக் கிறது. அதாவது உலகின் வாணிப மறுமலர்ச்சி, அதனூடான சர்வதேச கம்பனிகளின் உருவாக்கம் இந்த தந்திரங்களைக் கையாள்கின்றன.
உதாரணமாக நாம் காலணியைக் கொள்வனவு செய்யும்போது சத பெறுமதியை அவதானிக்கிறோம். எங்களிடம் இருந்து சத பெறுமதி நீக் கப்பட்டு வெகு நாளாகிவிட்டது.ஆனாலும் கம்பனிகளது கவரும் தந் திரம் அதைத் தன்வசம் வைத் திருக்கிறது.
ஒரு காலணியில் 999.90 சதம் பொறிக்கப்பட்டிருக்கும். (கம் கனி, பொருள்தரம் என் பனவற் றுக்கு ஏற்ப விலை வேறுபடும்)பார்க்கும் போது அது  பணப்பெறுமதியைக் குறைத்துக் காட்டுவது போலத் தெரியும். ஆனால் அதன் விற்பனைப் பெறுமதி 1000.00 ரூபா. இந்த தொகையை விற்கப்படும் பொருளில் பொறித்திருந்தால் பார்ப்பவர்கள் ஆயிரம் ரூபாவா? என்று வாயைப் பிழக்கக்கூடாது என்பதே வாணிப உளவியலின் நோக்கம்.

நண்பரின் பெறுமதி

காலத்தால் பழமையான ஐந்து சதக் குற்றியைத் துளையிட்டு தனது கழுத்தில் அணிந் திருக்கிறார் எனது நண்பர் ஒருவர்.அவரது விளக்கம் "பணம் இண்டைக்கு இருக்கும் நாளைக்கு போய்விடும்'. இப்பிடி போயிட்டா என்னைப் பாத்து ஒருவன் "அஞ்சு சதத்துக்கு பெறுமதி இல்லாதவன்' எண்டு பேசக்கூடாது என்பது தான்.
அந்த ஆசை என்னையும் விட்டுவைக்கவில்லை. நானும் ஒரு சதத்தை கழுத்தில் அணிய ஆசைப்பட்டேன். ஆனால் அதை "உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்'  (காதல் அல்ல) என்று சொல்லும் ஒருவர் அணியவிடாது தடுத்து விட்டார். ஆனால் அவருக்கு இப்போ என்னைப் பிடிக்காது. பணம் தான் ஆள்மாறுகிறது எண்டால் அன்பும் இப்ப அப்பிடித் தானே? ஐயகோ அதை பற்றி பேசவே வேண்டாம்.

அன்பும் சில்லறை

காதல், அன்பு பற்றிய பழங்காலக் கட்ட மைப்புக்கள் மாற்றப்பட்டுவிட்டன. இப் போது சமூகவலைத்தளங்கள்தான் காதல், அன்புக்கு அடித்தளங்கள். இதில் தொலைபேசி களும் அடக்கம். கட் ஆவதும் இணைக்கப்படு வதும் அவரவர் விதி. ஆனால் வரைவிலக்கணங் களும் எடுத்து காட்டுகைகளும் பாரம்பரிய மான தாகவே இருந்தாலும் பிரையோகமாற்றம், விதிகளுக்கு அப்பால் விடுபட்டு சீரழிவுக்கான ஆரம்பத்தை அறிமுகப்படுத்துகின்றன.
உன்னைத் தவிர அனைவரும் உத்தமர்கள் என்பதே குற்றம் நீரூபிக்கப் பட்டவனதும் வாக்குமூலமாக இருக்கிறது.அப்படியானால் குற்றவாளி இந்த உலகமே.மனித நாகரிகம் இன்று உலகை குற்றவாழிக் கூண்டில் அடைக்க தலைப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது.அதுவே அழிவின் விளிம்பு.

சில்லறை வழக்குகள்

பேச்சுத் தொனியும் கருத்தாடலும் திறம்படக் கொண்ட நம் உத்தமர்கள் உண்மையை பொய்யாக்குவதிலும் பொய்யை உண்மையாக்குவதிலும் வல்லவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் மக்களின் எதிர்காலம் தவிர இவர்கள் ஆடிய வழக்குகள் அனைத்தும் வெற்றியே.
நீதிமன்றுகள் அதிரும்படியாக வழக்காடும் ஆற்றல் கொண்ட நம் முன்னோர்கள் தமிழ் மக்களது எதிர்காலத்தை சில்லறையாக்கிவிட்டு ஒரு ரூபா பணத்துக்காக வழக்காடியுள்ளனர் என்பது வேதனைக்குரியது.
இன்றும் தமிழனின் இருப்பு கேவலப்படுவதற்கு இந்த அடித்தளங்களே காரணமாகின என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டும். வரலாறுதான் தமிழினத்துக்கு துரோகம் இழைத்திருக் கிறது.
மீண்டும் ஒரு சில்லறை சம்பவத்துடன் சந்திப்போம்.

நன்றி சுடர்ஒளி 23-29.10.2013

Post Comment

கருத்துகள் இல்லை: