திங்கள், ஜனவரி 13, 2014

அப்பாவை விடுவியுங்கோவன்?

அண்ணனை இழந்த தங்கைகளின் கதறல்

நிதர்சனின் அம்மா சிவஜினி,கடைசிதங்கை கதுர்சிகா
வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம்தானே இருந்தது. அப்ப எல்லாரும் அவைக்குக் கீழதானே வேலை செய்தவை? என்ர மனுசனும் அப்பிடித்தான் வேலை செய்தவர். அவருக்குத் தச்சு வேலையைத் தவிர வேறெதுவும் தெரியாது. வடபிராந்திய பாரவூர்திச் சங்கத்திலதான் அவர் 1999ஆம் ஆண்டில இருந்து இறுதி போர் நடக்கும் வரைக்கும் வேலை செய்தவர். அதுதான் அவர் செய்த பிழையா இருக்கவேணும். 

தாங்கள்தான் இயக்கம் எண்டு சொல்லிக் கொண்டிருந்த எத்தினையோ பெரிய ஆக்கள் எல்லாம் இப்ப அரசாங்கத்தில அமைச்சரா இருக்கினம். என்ர புருசனப்போல ஒண்டும் தெரியாத உடம்பு ஏலாத ஆக்கள்தான் அவைக்குக் குற்றவாளியளாம்?'' அழுகையுடன் வெடித்துச் சிதறும் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றபடி பேசுகிறார் மூன்று பெண்பிள்ளைகளை மடியில் கட்டிக்கொண்டு, இருந்த ஒரே மகனையும் பறிகொடுத்த அந்த இளம் தாய்.

"அவர ரிஐடிகாரர் (பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார்) பிடிச்சுக்கொண்டு போயிருக்காட்டி என்ர குடும்பத்துக்கு இந்த நிலை வந்திருக்காது. ஒரேயொரு ஆம்பிளப்பிள்ளையையும் நாங்கள் இப்பிடிப் பறிகொடுத்திருக்க மாட்டம். இப்ப ஆர் இருக்கினம் எங்களுக்கு? அனாதையளா நிக்கிறம். இந்த மூன்று பொம்பிளப் பிள்ளைகளையும் வைச்சுக்கொண்டு நான் என்ன செய்ய ஏலும்? நாங்களும் செத்துப்போறதத் தவிர வேறு வழியில்லை.''
கண்ணீர் நிறைந்த அந்தத் தாயின் கதை நெஞ்சில் பதறலை உருவாக்குகிறது.
------
கிளிநொச்சி திருநகர் தெற்கு கிராமத்தில் இருக்கிறது அந்தச் சாவுக்களை இன்னமும் விலகாத வீடு. வீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்ட உதவியில் கட்டப்பட்ட வீடு இன்னமும் முழுமையடைய வில்லை. அங்குதான்  சிவாஜினி தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் அந்தரிக்க விடப்பட்டுள்ளார்.

சிவாஜினியின் கணவர் வீரலிங்கம். 2012.03.14 அன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். இதுவரையில் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் அதிகாரிகள் சுமத்தவில்லை.

யாழ்ப்பாணம் நல்லூரடிதான் வீரலிங்கம் குடும்பத்திற்குச் சொந்த இடம். "சூரியக்கதிர்' இராணுவ நடவடிக்கை அவர்களை அங்கிருந்து இடம்பெயர்த்தியது. கிளிநொச்சி, அக்கராயன் என்று பல்வேறு இடங்களும் ஓடி ஓடித் திரிந்துவிட்டு புலிகள் கிளிநொச்சியை மீட்ட பின்னர் திருநகர் தெற்கு பகுதியில் சொந்தமாகக் காணிவாங்கிக் கொண்டனர்.

18 வயதிலேயே தச்சுவேலை செய்ய ஆரம்பித்தவர் வீரலிங்கம். அதனால் வன்னியில் அதுசார்ந்து தொழில் கிடைத்தது. வாழ்வாதாரத்துக்கான தொழிலாக அதுவே இருந்து வந்தது. வடபிராந்திய பாரவூர்திச் சங்கத்தின் கீழ்  பாரவூர்திகளைப் புதுப்பித்தல், சீர்செய்தல் உள்ளிட்ட திருத்தவேலைகளைச் செய்யும் பணி அவருக்குரியது.

கொழும்புக்கு அனுப்பப்பட்ட குண்டு லொறிகளை இவர்தான் உருவாக்கிக் கொடுத்தார் என்ற யாரோ கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதனையும் அவர்களால் இதுவரையில் பெறமுடிய வில்லை. அதனால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யா மலேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரைத் தொடர்ந்தும் தடுப்பில் வைத்திருக்கிறார்கள்.

தந்தை சிறைக்குச் சென்றதும் நான்கு பேர் கொண்ட அந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடக்கூடாது என்று வீரலிங்கத்தின் மூத்த மகன் - பதினைந்தே வயதான சிறுவன் - வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். படிப்புப் பாழாய்ப்போனது. வேறு என்ன செய்வது? குடும்பத்தை அரை உயிரும் குறை உயிருமாகக் காப்பதற்கும் தங்கைகளையாவது பாடசாலைக்கு அனுப்புவதற்கும் அந்தச் சிறுவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. தந்தையின் வழியில் தச்சுத் தொழில்பட்டறைகளை நாடிச் செல்லத் தொடங்கினான்.

திடீரென்று ஒருநாள் மடிந்து வீழ்ந்து அவனது உயிர் பிரிந்துவிட்டது. என்ன காரணம் என்ற மருத்துவ உலகம் இன்னமும் கண்டுபிடிக்க வில்லை. வழக்கமான "ஹாட் அட்டாக்'கோ வேறு காரணங்களோ சாவை அவனிடம் பிடித்து இழுத்து வந்திருக்கவில்லை என்பதை மட்டுமே உறுதிப்படுத் துகின்றன மருத்துவச் சோதனைகள். பிஞ்சு வயதில் அவன் சுமந்த சுமைதான் அவனது சாவுக்குக் காரணமா? என்று மருத்துவத்துக்குச் சொல்லத் தெரியவில்லை.

வீரலிங்கம் சிறையில் வாட, குடும்பப் பாரத்தை சுமந்த பாலகன் கைவிட்டுப்போக நிர்க்கதியாகிப்போய் நிற்கிறது குடும்பம் இப்போது. அவர்களின் தற்போதைய நிலை மனித குலத்தின் அவலமாய் எழுந்து பயமுறுத்துகின்றது.

போர் தந்த பரிசு
"இறுதிப் போர் உச்சத்துக்குப் போனபோது புதுமாத்தளனில செல் பட்டு அவர் காயப்பட்டவர். அங்க மருந்து வசதி இல்லாததால அவரையும் எங்களையும் செஞ்சிலுவைச் சங்கத்தின்ர ரெண்டாவது கப்பலில்  திருகோணமலைக்கு ஏத்திச்சினம். அங்க வச்சே கணவரை வைத்தியசாலைக்கும் என்னையும் பிள்ளைகளையும் வவுனியாவுக்கும் அனுப்பிச்சினம்.

"செட்டிகுளம் பாடசாலையில் இருக்கேக்க மூன்று மாதத்துக்குப் பிறகு அவரைக் கொண்டுவந்து எங்களோட விட்டவை. ஆனால் அவருக்குக் காயம் ஆறேல்லை. வன்னியில் அவருக்கு வயித்தில போட்ட தையல் பொருந்தேல்லை எண்டு திருகோணமலை மருத்துவமனையில் திரும்பவும் அறுவை சிகிச்சை செய்தவை. ஆனால் செட்டிகுளம் கொண்டுவந்ததும் அவருக்கு சரியாகேல்லை. திரும்பவும் வவுனியா ஆஸ்பத்திரியில சேர்த்தவை. அதுக்குப் பிறகு அவரோட எங்களுக்குத் தொடர்பே இருக்கேல்லை. அவர் இறந்து போனார் என்று கூடச் சொல்லிச்சினம். செட்டிகுளம் மாதா கோவில் அருட்சகோதரிதான் அவர் உயிடோட இருக்கிறார் என்றதை எனக்கு தெரியப்படுத்தினவர்.''

இடையில் நிறுத்துகிறார் சிவாஜினி.

 "நீங்கள் எல்லாத்தையும் பேப்பரில எழுதி விட்டிருவியள். எனக்குப் பயமாஇருக்கு. நாளைக்கு இதால எனக்குத்தான் பிரச்சினைவரும்.'' என்கிறார். பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி இதைச் சொல்கிறார்.

"கதிர்காமர் முகாமுக்கு எங்களை மாத்திச்சினம். 2009 செப்ரெரெம்பர் மாதம் நாங்கள் யாழ்ப்பாணம் போனம். நல்லூரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தம். அவர் தச்சுவேலைக்குப் போகாமல் பாதுகாப்பு உத்தி யோகத்தராக வேலை செய்தார்.

புலி முத்திரை
"அப்பத்தான் இடி விழுந்தது. வீட்ட வந்த சிலர் ஒரு கடிதத் துண்டு குடுத் திச்சினம். அதில 2012.01.27ஆம் திகதி கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வரச் சொல்லியும், அவருக்கு எல்.ரீ.ரீ.ஈ. உடன் தொடர்பு இருக்கெண்டும் எழுதியிருந்தது. அது குறித்து விசாரிக்கத்தான் கூப்பிடுகினம் என்றும் அந்த கடிதத்தில் இருந் தது. (கடிதத்தை காண்பிக்கிறார். அது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.)

"அதுக்குப் பிறகும் ஒரு தவணைக்கு கொழும்புக்கு விசாரணைக்கெண்டு போய் வந்தவர். மூன்றாம் முறை (2012.03.14) விசாரணைக்குப் போனவர் திரும்பிவரேல்லை. தேடிப் போன என்னட்ட, "பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு' என்று தலைப்பில ஒரு கடிதம் தந்திச்சினம். அது தனிச் சிங்களத்தில இருந்தது.

"அவருக்கும் புலியளுக்கும் தொடர்பு இருக்கெண்டிச்சினம். நான் இல்லை எண்டு சொன்னனான். அவர் இயக்க நிறுவனத்தில் சம்பளத்துக்குத்தான் வேலை செய்தவர், வன்னியில் இருந்த பெரும்பாலானாக்கள் இதைத்தான் செய்தவை எண்டு சொன்னன். அவையள் அதைக் கேக்கவே இல்லை.

"அவரை விடச்சொல்லிக் கேட்டு நான்போகாத இடம்இல்லை. ஒருக்கா அவரைப் பாக்க கொழும்புக்குப் போகேக்க, அங்கயிருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஓராளிண்ட காலைப் பிடிச்சுக்கூடக் கெஞ்சிப் பாத்தன்.

"குடும்பம் இவரை நம்பித்தான் இருக்கு. அவர் இல்லை எண்டால் பிள்ளை யளின்ர வாழ்க்கை நாசமாய் போயிடும் என்று எவ்வளவோ சொல்லியும் அவை இரங்கேல்லை. நான் சிஜடியின்ர காலைப்பிடிச்சு அழுததைப் பாத்து என்ர கடைசி மகள் ஆத்திரப்பட்டு அவற்ற சப்பாத்தைப் பிடுங்கி எறிஞ்சு கதறியழுதாள். ஆனால் அவைக்கு மனசு இளகவேயில்லை.

சிலுவை சுமந்த சிறுவன்
"அப்பாவப் பிடிச்சுக்கொண்டுபோன மறுநாளே மகன் (நிதர்சன்) பள்ளிக் கூடம் போறத நிப்பாட்டீட்டான். அப்ப அவன் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கொலிஜ்ஜில தரம் 9 படிச்சவன். என்னால் அவனைத் திரும்ப பள்ளிக்கூடம் அனுப்பமுடியேல்லை.

"நாங்கள் யாழ்ப்பாணத்தில் வாடகை வீட்டிலதான் இருந்தம். வீட்டு வாடகை, கரண்ட்பில், வீட்டுச் செலவு, பிள்ளைகளின்ர படிப்பு எண்டு சமாளிக்க முடி யேல்லை. அதனால பிள்ளை ரவுணுக்குள்ள ஒரு இரும்புக் கடைக்கு வேலைக் குப் போனான். அப்பத்தான் எங்களுக்கு கிளிநொச்சிக் காணியில வீட்டுத் திட்டம் தந்தவை. யாழ்ப்பாணத் தில இருந்து கிளிநொச்சிக்கு வந்து குடியேறினம்.

"அண்டையில இருந்து மகன் மேசன், தச்சு வேலைக்குப் போறவன். என்னால் அதுக்குப் பிறகு அவன பள்ளிக் கூடம் அனுப்பமுடியேல்லை. பெத்த வயிறு பத்தி எரிஞ்சுது.... என்ன செய்ய மூன்று பெம்பிளைப் பிள்ளையள். அவன்தான் மூத்த பிள்ளை....'' சொல்லிக்கொண்டே அழுகிறார்.

               நிதர்சனுக்கு மதிய உணவு
                               
விதி
"நாலாம் திகதி பிள்ளை( நிதர்சன்) வழக்கம்போல காலேல 7.30 மணியிருக்கும் வேலைக்கு போக வெளிக்கிட்டான். சைக்கிளுக்கு காத்து அடிச்சதைப் பாத்தன். பம்மைக் கொண்டுவந்து வைச்சிட்டு சைக்கிளை எடுக்கப்போனவன் திடீர் எண்டு விழுந்திட்டான். சத்தம் கேட்டு ஓடிவந்து பாத்தால் முச்சுப் பேச்சு இல்லை. நான் குளறியழுத சத்தம் கேட்டு ஆக்கள் ஓடிவந்தினம்.

"உடனை ஒரு மோட்டார் சைக்கிளைக் கொண்டு வந்தினம். அது ஸ்ரார்ட்டாக மாட்டன் எண்டிட்டுது. பிறகு ஓட்டோ பிடிக்கப் போச்சினம். அதுக்கும் அதேநிலைதான். பிறகு திருநகர் றோட்டுக்குப் போய் மஞ்சுளா பேக்கரி சந்தியில இருந்து ஓட்டோ கொண்டு வந்த பிறகுதான் ஆஸ்பத்திரிக்குப் போனம்.

"பிள்ளை மயங்கிப் போட்டான் எண்டு நினைச்சுத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனனாங்கள். ஆனா உயிர் போட்டுது என்று டொக்டர்மார் சொல்லிப்போட்டினம்.

"கிட்டத்தட்ட ரெண்டு வருசமா வீட்டுப் பொறுப்பை அவன்தான் பாத்தவன். அவனும் இப்ப எங்கள விட்டுப் போட்டான். அந்தளவுக்குப் பாவம் செய்து நாங்கள் பிறந்திட்டம்.

"அவனுக்கு எந்த வருத்தமும் இருக்க வில்லை. மூன்றாம் திகதி வேலை செய்யும் இடத்தில் தலைச்சுத்து என்று சொன்னவனாம். ஆனால் எங்களுக்குச் சொல்லேல்லை. பிறகுதான் அது எங்களுக்கு தெரியவந்தது.''
பார்வை வெறித்து நிலை குத்திப்போக வார்த்தைகள் வராமல் அமர்ந்திருக் கிறார் சிவாஜினி.

குட்டித் தங்கையின் ஆசை
நிதர்சனின் கடைசித் தங்கை கதுர்சிகா தாயின் பக்கமாக வருகிறாள். அவளி டம் "அண்ணாவில விருப்பமா?'' என்று கேட்டதும் அழத் தொடங்கிவிட்டாள்.

இந்த வருடம்தான் முதலாம் தரத்தில் சேர்ந்திருக்கிறாள் கதுர்சிகா. அண்ண னிடம் கொப்பி வாங்கித் தருமாறு கேட்டாளாம். அதற்கு அவன் சொன்ன பதில் கல்நெஞ்சையும் கரைய வைக்கும்.

"நான் எப்படித்தான் வேலை செய்தாலும் காசு தாறாங்கள் இல்லை. எல்லாரும் பெரியாக்கள். நான்மட்டும்தானே சின்னஆள். என்னிட்டத்தான் நல்லா  வேலை வாங்குவினம். ஆனால் சம்பளத்த ஒழுங்கா தாராங்கள் இல்லை. 10ஆம் திகதி காசு வந்திடும். அப்ப அண்ணன் உனக்கு கொப்பி பென்சில் எல்லாம் வாங்கித் தாறன். இப்ப இருக்கிறத வச்சு சமாளி, என்ன?'' என்று சொன்ன அந்த அண்ணனை நினைத்து ஏங்குகிறது அந்தத் தங்கையின் மனது.

"அப்பாவை விடுவித்திருந்தால் அண்ணணுக்கு இந்த நிலை வந்திருக்காது. இப்ப அண்ணணும் இல்லை. இனி எங்களுக்கு யாரும் இல்லை. அப்பா ஒரு குற்றமும் செய்யேல்லை. அவரை ஏன் விடுகினம் இல்லை? அவரை விடச்சொல்லுங்கோவன்!'' தங்கைகள் மூவரும் இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லுகின்றனர்.

கே.பி.யும் வந்தார்
பிள்ளை உயிரிழந்த செய்திகேட்டு அந்த வீடு தேடி வந்து ஆறுதல் கூறிய அரசியல்வாதிகள் மற்றும் பலரில் கே.பி. எனப்படும் செல்வராசா பத்ம நாதனும் அடங்குகிறார். "இவை தானே முந்திப் புலிகள், இயக்கம் எல்லாம்! ஆனால் அவை இப்ப சுதந்திரமாக உலாவுகினம். புலிகளின்ர தளபதியள் என்று சொல்லித் திரிஞ்சவை எல்லாம் அப்படியிருக்கினம். ஆனா, சம்பளத்துக்கு வேலை செய்த என்ர புருசனத்தான் புலி எண்டு அடைச்சு வைச்சிருக்கினம். இது என்ன நியாயம்?''

அதன் பின்னர் நேற்று வடக்கு மாகாண ஆளுநரும் வருகை தந்து என்ன தேவை என்று கேட்டுவிட்டுச் சென்றாராம். தடுப்பில் இருக்கும் கணவனை விடுங்கள் அதுபோதும் எங்களுக்கு என்று சொல்லியிருக் கிறார்கள் அந்தக் குடும்பத்தினர்.

இரக்கமற்ற அதிகாரிகள்
நிதர்சன் திடீரென வீழ்ந்து உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

வீட்டாரிடம் சாவில் சந்தேகம் ஏதும் இருக்கிறதா? என்று சட்ட வைத்திய அதிகாரி கேட்ட போது எங்களுக்கு அப்படி எதுவும் இல்லை. சாவுக்கான காரணத்தை நீங்கள்தான் கண்டறிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

சிறுவனின் சாவு தொடர்பான அவனது உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சோதனை முடிவில் ஒருவேளை சாவுக்கான காரணம் தெரியவரும். ஆனால் அதற்கிடையில் "உன் மகன் குடிச்சுப்போட்டுத்தான் செத்தவனாம் என்று நாங்கள் கேள்விப்பட்டம்'' என ஈவிரக்கமற்ற முறையில் கேள்வி கேட்டிருக்கிறார்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார்.

"என்ர பிள்ளை குடிக்கிறதில்லை. அக்கம்பக்கத்தில கேளுங்கோ சொல்லு வினம். அப்பிடி எனக்குத் தெரியாமல் செய்தாலும் மருத்துவ அறிக்கையில உண்மை தெரியவரும்தானே'' என்று கோபப்படுகிறார் சிவாஜினி.

மீட்க உதவினால்போதும்
"சிலர் தொடர்புகொண்டு உதவி செய்யலாம் என்று சொல்லுகினம். கணவரை விடுவிக்க உதவுங்கோ. அது போதும் எங்களுக்கு. அதுதான் எங்களின்ர கோரிக்கை.'' முடித்துக் கொள்கிறார் சிவாஜினி.

நன்றி-சூரியகாந்தி(12.01.2014)




Post Comment

2 கருத்துகள்:

Unknown சொன்னது…


கண்ணீரை தவிர வேற என்ன சொல்லுறது எண்டு தெரியல

vkm சொன்னது…

போரின் அவலம் தொடர்கிறது....இப்படி இன்னும் எத்தனையோ சோடி கண்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றன...