ஞாயிறு, மே 18, 2014

மாண்டோருக்கஞ்சலி



மாண்டோருக்கஞ்சலி ஆன்றோர் செலுத்துகையில்
பூண்டோடு தடையறிவித்தது படைக்கூட்டம்
ஒன்றன்று பலர்கூடி தொழ ஒருபோதும் விடோம்
என்று இழுத்துமூடிற்று பல்கலையை
முடிவுப் போரதனில் படுகொலை புரிந்து எம்
உரிமை முழுவதையும் விழுங்கிய படை
எம்மூர்களில் குந்தியிருந்து விரட்டுகிறது
ஏதுமில்லையிங்கே ஓடிவிடு என்று

அண்ணன் தொலைந்தான்! புன்னகைதந்த 
புருஷன் தொலைந்தான்! செல்வ குழந்தைகள்
தொலைந்தன! எம்துயர் கேளென்று புலம்புகையில்
பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி என்கிறது பகை

கொஞ்சிக்குலாவிய வஞ்சமற்ற உயிர்கள்
பிஞ்சு வயதினில் கொலைக்கருவிகளுக்காள்பட
நெஞ்சுபொறுக்கா நினைவுகள் சுமந்து நாமழுதோம்
பிரபஞ்சமழிந்திடினும் ஆறாதெம்துயரம்!

கூடவிருந்து கதைபேசிய அன்பு நண்பன் மாண்டான்
அப்பா! அம்மா! அக்கா! அண்ணன்! தம்பி! தங்கை!
என்று கூண்டோடு பலர் மாண்டுபோயினர்
மறந்திடுமோ எம் மனங்கள் இத்தனையும்?

உயிர் நீத்தோர் நினைவேந்த எம்மூரில்
எமக்கனுமதி மறுக்கிறான் மாற்றான்
தன் வெறி தீர தமிழ் மண்ணில் நின்று
வேண்டாக் கேளிக்கை காட்டுகிறான்

போதி மாதவன் புத்தர் துணைகொண்டு
படுகொலை தேசத்தில் படைக்கு மாலைசூடி
எம்மினமழிக்க சிங்கள தேசம் இன்று
கங்கணம் கட்டி நிற்கிறது

எத்தனை இடர் வ(த)ரினும்
அத்தனை மனங்களும் பூசிக்கும்
சொத்தன்றி சுகமுமன்றி எம்
தேச உறவுகளுக்காய்!

18.05.2014 (12.00am)

Post Comment

2 கருத்துகள்:

gokul சொன்னது…

அருமை. கவிதையில் இடம்பெற்ற கருத்தும் அருமை.

எனது தளத்தில் ஓர் அரசியல் பதிவு

நரேந்திர மோடி கடந்து வந்த பாதை

வீகேஎம் சொன்னது…

நன்றி நண்பரே! உங்கள் ஆக்கத்தையும் வாசித்தேன்....சிறப்பாக இருக்கிறது...