சனி, அக்டோபர் 18, 2014

முன்னாள் போராளிகளின் திடீர் சந்திப்பு!

காலம்: 18.10.2014
நேரம்: காலை 09.08
இடம்: பயணிகள் பஸ்

யாழ்ப்பாணம் நோக்கி அந்த பஸ் பயணத்தை தொடங்கியது. ஐந்து நிமிடங்களில் தாய், தந்தை, அவர்களின் மகன் என மூவர் அந்த பஸ்ஸில் ஏறினர். தனது வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக இழந்த இளைஞரும் அடுத்த தரிப்பில் ஏறினார்.

பஸ்ஸின் முன் இருக்கையில் அமர்ந்த அந்த இளைஞரை நோக்கி டேய்! என்று ஒரு குரல்.


அவர் திரும்பிப்பார்க்குமுன் நானும் திரும்பிப் பார்த்தேன்.

ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் ஏறிய அந்த குடும்பத்தலைவர்தான் அந்த குரலுக்குரியவர்.

அவரது முகம் சிரிப்பால் மூழ்கியிருந்தது. சிரிப்புக்கான எல்லா வரையறைகளையும் அந்த ஒரு முகம் வெளிப்படுத்தியது.

''எங்க போயிட்டு வாற?'' சிரித்தபடியே உரையாடல்!

"நான் ஒரு அலுவலா இரவுதான் வந்தன். மழை பெய்யுது. வயல் விரைக்கவேணும் அதால உடன வெளிக்கிட்டுட்டன். நீங்கள்?" என்றான் அந்த இளைஞன்.

நான் இங்க சொந்தக்கார வீடுஒண்டு இருக்கு, வந்தன். இப்ப பளைக்கு போறன். நீ என்ன செய்ற? என்றார் அந்த சிரிப்பு மனிதர்.

கிட்டத்தட்ட இருவருமே பார்த்து சிரிக்கிறார்கள். அவர்களது சிரிப்பு ஏதேதோ சொல்கிறது. அதாவது வன்னியில் 2009 காலப்பகுதிப்கு பின்னர் இப்போதுதான் இருவரும் இப்படி சந்தித்திருப்பார்கள் போலும். உரையாடல்களே அந்த இடைவெளியை வெளிப்படுத்தின.

"நான் கடைவைத்திருக்கிறன். வயலும் செய்யிறன். இப்பிடிபோகுது வாழ்கை" மனதில் எந்த வருத்தமும் இன்றி அவரது வார்த்தைகள் வெளிவந்தன.

15 நிமிட இடைவெளியில் ஒரு தரிப்பிடத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் இறங்கினர்.

அப்போது தனது மனைவியிடம், "இவரை தெரியுமா" என்று அந்த சிரிப்பு மனிதர் கேட்டார்.

அந்தப்பெண் யோசித்தார்.....தெரியல்ல...யார் என்று கணவன் பக்கம் திரும்பிச் சிரித்தார்!

அந்த இளைஞனின் தந்தையின் பெயரைச் சொல்லி, அவருடைய மகன்தான் இவர், இப்ப தெரியுதா? என்றார்.

''ஐயோ!....தம்பி எப்பிடி இருக்கிற?'' ...... பஸ் யன்னல் கண்ணாடிவளியே அவரது கரங்களைப் பற்றி ஆரவாரப்பட்டார். தம்பி எப்படியிருக்கிற.....?

அம்மா இல்லத்தானே அக்கா, அப்பா இருக்கிறார்......கடையில தான் அவரும்........ என்ற வசனப் பரிமாற்றங்களுக்கிடையில் அந்த தரிப்பிடத்தை விட்டு பஸ் புறப்படுகிறது.

சந்திப்போம்! என்றபடி அந்த சந்திப்பு முடிந்தது.

அந்த பஸ்ஸில் பயணித்த என் கண்களுக்கும், காதுகளுக்கும் இந்த தகவல்கள் எட்ட..... அவர்களின் மனதுக்குள் இன்னமும் ஏதோ ஏக்கம் தெரிவதை மனது உணர்ந்துகொண்டது.

அடுத்த சில நிமிடங்களில் நானும் பஸ்ஸிலிருந்து இறங்கிக்கொண்டேன்.

Post Comment

கருத்துகள் இல்லை: