புதன், நவம்பர் 13, 2013

விடுதலைக்காக துயிலுரிக்கப்பட்ட இசைப்பிரியா

சுடர்ஒளி வார சஞ்சிகையில் சின்னவன் எழுதிய பதிவை அவரது அனுமதியுடன் இங்கே இடுகை செய்துள்ளேன்.

கணீர் என்ற குரல்.இப்போதும் காது களைத் துளையிட்டுச் செல்கிறது.அவளது அழகுத் தோற்றமும்,மெல்லிய உடலும், அஞ்சாத பார்வையும்,ஆளுமையும் ஈழத்துப் புதுமைப்பெண்ணாய் அவளை தோற்று வித்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் பரிணமிப்புகள் குறித்து இப்போது விரும்பத்தகாத பரப்புரைகளே மேலோங்கி யிருக்கின்றன. விடுதைலைப் போராட்டத்துடன் ஒன்றித்து இருந்தவர்களில் பலர் இன்று அரசுப்பக்கம் தாவி தங்கள் பிழைப் புக்காக வரலாற்றைப் புரட்ட முற்படுகின்றனர். இப்படியாகத் தமிழினத்துக்கு வந்த சாபக் கேடு, இனத்தின் இருப்பைக் கேள்விக் குறியாக்கியிருக்கும் நேரத்தில் புதிய அதிர்ச்சி இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதே.
இசைப்பிரியா சிங்கள காட்டுமிராண்டி படைகளால் உயிருடன் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். படையினருக்கு இசைப்பிரியா என்ற பெண் கொல்லப்படும் வரை இசைப்பிரியா துவாரகாவாகவே தெரிந்திருக்கிறாள்."ஐயோ அது நான் இல்ல' அந்த ஓசைதான் கணீர் ஒலியின் கடைசி உச்சரிப்பு. இனி இசைக் குயில் ஓசை  எங்கள் காதுகளுக்கு எட்டாது. மனதில் ஏந்தி வைத்திருக்கும் நினைவுகளை மட்டுமே அளவிட்டுக் கொள்ளமுடியும்.

ஈழ விடுதலைப் போராட்டம் ஒருபக்கம் பெண்விடுதலை மறுபக்கமாக வளர்ச்சி பெற்ற காலம் அது. ஒரு போராளியாக இருந்து கொண்டு மக்களுடன் பணியாற்றி யவள் என்பதுடன் பெண்விடுதலைக்காகவும் பாடுபட்டவள் இசைப்பிரியா. ஆணாதிக்க சமூகத்திடம் இருந்து பெண்கள் விடுதலை பெறவேண்டும்,அடக்குமுறையாளர்களது பிடியிலிருந்து பெண்கள் வெளிவரவேண்டும்.அப்படி வரவேண்டுமானால் பெண்கள் போராடவேண்டும் என்ற சிந்தனையோடு செயலாற்றியவள் இசைப்பிரியா.

எந்த நோக் கத்துக்காக இசைப்பிரியா போராடி னாளோ எவை எல்லாம் இந்த தேசத்தில் தடுக்கப்படவேண்டும் என்று குரல் கொடுத்தாளோ அந்த நோக்கமும் குரலும் அவளது குரல் வளையை நசித்து விட்டது. இந்த துன்பகரமான பொழுதில் பலர் இந்தக் கொடுமைகளை சரி என்று வாதிடுவது கேவலமானது.

தமிழினத்தின் வாழ்வுக்கும் விடியலுக்கும் குரல்கொடுத்த போராளி இசைப்பிரியா என்றென்றும் தமிழ்மக்களைவிட்டகலா மாவீரரே.

இசைப்பிரியா பற்றி எனது குறிப்பு(சின்னவன்)

நான் உயர்தரப்பரீட்சை எழுதிவிட்டு இருந்த காலம் அது.சும்மா இருப்பதை விட ஏதாவது வேலை செய்யவேண்டும் என்ற விருப்பம். நண்பரின் உதவியுடன் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுக்கான பயிற்சிக் குழுவில் இணைந்து கொண்டேன். நாங்கள் இரண்டாவது பயிற்சி அணி. காலையில் இருந்து மதியம் வரை பயிற்சி. செய்தி, கமெரா, நிகழ்சிச்த் தொகுப்பு உள்ளிட்ட பயிற்சிகள். தேர்ச்சி பெற்றவர்களால் வழங்கப்பட்டன.

மூன்று மாத பயிற்சியின் முடிவுக்கட்டம் அது. இசைப்பிரியா அக்கா என ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும் அவரது திறமைகள்பற்றி ரீவியில் மட்டுமே அவதானித்திருந்தோம்.ஆனால் முதற்தடவையாக அவர் எங்களுக்கு செய்தி வாசிப்புத் தொடர்பாக பயிற்சிதர வந்திருக்கிறார். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. அவள் முகம் எப்போதும் சிரித்தபடி இருக்கும்.ஆனாலும் கண்டிப்பு. பெண்போராளிகள் அவர்மீது வைத்திருக்கும் மரியாதை, பயம் எல்லாம் அவரது செயற்பாடுகளுக்கான பக்கபலமாகத்தான் இருக்கவேண்டும்.

தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவின் நிதர்சனம் மகளிர் பிரிவில் இருந்து அவர் குறுத்திரைப்படங்கள், திரைப்படங்கள், பாடல்கள் வாயிலாக தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகளை வெளிக் கொணர்ந்தவர். மக்களோடு பணியாற்றியதால் அவளை தமிழ்ப் பாண்பாட்டு உடைகளிலேயே அவதானிக்கமுடியும். சரி பிழைகளை நேருக்கு நேராக சுட்டிக்காட்டுவார். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் இவைதான் அவரது வளர்சிப் படிகள்.
இசை அக்காவின் இத்தனை உணர்வுகளும் தான் எல்லோருக்கும் அவர்மீது விருப்பத்தை யும் நம்பிக்கையையும் வளர்த்திருந்தது.அப்படி அவரின் இரசிகர்கள் பட்டியலில் இருந்த எமக்கு அவரே பயிற்சி தரவந்திருந்தார்.

ஈழநாதம் பத்திரிகைதான் வன்னியில் செய்திபரப்பி.பாதை அடைபட்டிருந்ததால் வேறு தினப் பத்திரிகைகளை உடனே பெற்று கொள்ளமுடியாது. எங்கள் கையில் அந்தப் பத்திரிகை தரப்பட்டது. அதற்கு முன் அறி வுரைகள் கருத்துக்கள் தொடங்கிவிட்டன. வட்டமாக கதிரைகளில் அமர்ந்திருக்கிறோம் சுழற்சிமுறையில் வாசிக்கவிடுகிறார். ஒவ் வொருவரும் "தம்' கட்டி செய்தி வாசிக்கின்றனர். வேறு வேறு "ஸ்ரைல்' வந்து போகின்றன. அக்காவுக்கு திருப்தியில்லை. "தம்' கட்டாதைங்கோ. உங்கட "ஸ்ரைல்ல' வாசிங்க. யாரையும் பின்பற்றவேண்டாம். ஒவ்வொரு வரையும் திரும்பத் திரும்ப வாசிக்கவிட்டு பிழைகளைச்சுட்டிக்காட்டினார்.

ஒளிவீச்சு தொகுப்பாளராகவும் துயிலறைக் காவியம்’ ரீவி நிகழ்சித் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் "சாலை வழியே’  வேலி'’"இராஜகுமாரியின் கனவு'’ உள்ளிட்ட குறும்படங்களின் பிரதான பாத்திரமாகவும் ஈரத்தி’ என்ற முழுநீளத் திரைப்படத்தின் நடி கையாகவும் இன்றளவும் இசைப்பிரியா எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்.
பயிற்சி முடிந்ததும் ரீவியில் செய்திப்பிரிவில் பணியாளராக இணைந்து கொண்டேன். அப்போது இடையிடையே செய்தி கலையகத்தில் இசை அக்காவை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

செய்தி வாசிப் புக்காக கலையகம் வரும் இசை அக்கா தேவையற்று எவ ரிடமும் பேசமாட்டார். தர்மேந்திரா கலையகம் மிகவும் அமைதி நிறைந்தது. அந்த அமைதிக்குள் கமராவுக்குமுன் ஒரு அமைதி.

தொலைக்காட்சியில் பெரும்பாலும் இரவு 8.30 செய்திக்காக கலையக அறிமுகத்தை இசை அக்கா வாசிப்பார். மடிக் கணினியின் திரையில் செய்தியின் கலையக அறிமுகம் "மூ' பண்ணிக்கொண்டிருக்கும். ஒரே தடவையில் அதை எந்த தடங்கலும் இன்றி வாசித்து விடுவார். விமானத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டே ஒளிபரப்பாகின.பதிவு ஓரிடம், தொகுப்பு ஓரிடம், ஒளிபரப்பு ஓரிடம் என்று பாதுகாப்புப் பலமாகவே இருந்தது.இவை எல்லாவறிலும் இசையின் பங்கு நிறைந்திருக்கும்.
இசை அக்கா வின் பணி இவை மட்டுமல்ல. எனக்கு தெரிந்த சிறு அறிமுகம் மட்டுமே இங்கு பதிவாகியிருக்கிறது.


****
இசைப்பிரியா ஒருத்தியின் துகில் மட்டும் உரிக்கப் படவில்லை. இது போன்று பல பெண்போராளிகளுக்கு இந்த அவலம் நிகழ்ந் திருக்கிறது. இறுதி நேரத்தில் பல பெண் போராளிகள் ரவுசர் சேட் அணிந்திருந்தமையால் மக்களோடு மக்களாக தஞ் சமடைய முடி யாது போனது. அந்த உடைகளுடன் மாட்டிக் கொண்ட போராளிகள் பலருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. பலர் சரண் அடைவதற்கு தயாராக இருந்தபோதும் உடை மாற்றியே சரணடைய வேண்டும் என்பதால் மரணித் திருக்கின்றனர்.

பல பெண் போராளிகள் இராணுவத்தினரால் உயிருடன் பிடித்து செல்லப்பட்டதை பலர் பார்த்திருக்கின்றனர். பிடித்து செல்லப்பட் டவர்களுக்கு என்ன நடந்தது? மிகச்சாதாரணமாகவே தமக்கு ஒன்றும் தெரியாது. காணொலி பொய், ஆராய வேண்டும் என்று இராணுவத்தரப்பு கூறுகிறது.

காமப்படைகளது பசிக்கு இரையாக்கப்பட்ட ஒரு ஈழப் பெண்ணின் காணத்தகாத கொடு மைக்காட்சிகள் இன்று இணையத்தளங்களில் வலம்வரு கின்றன. இசைப்பிரியாவுடன் இறந்து கிடக்கும் சடலங்களும் பெண்போராளி களினதே. அப்படியானால் அவர்களுக்கும் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. வெளிவராத கொடுமைகள் பல இன்னும் மறைந் திருக்கின்றன. காட்சிகளை ஒளிவடிவில் இராணுவத்தினரே பதிவுசெய்திருக்கின்றனர்.

விளைவுகள் என்ன ஆகும் என்று அறியாத இராணுவத்தினருக்கு அப்போது அவை ஆபாச வீடியோக்களாக தெரிந்ததால் தமது தொலைபேசிகள் வாயிலாக வேறு நபர்களுக்கு பகிர்ந்திருக்கின்றனர். அவை வெளிநாட்டு ஊடகங்களுக்கு விலைபேசி விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டுள்ள சர்வதேச ஊடகங்கள் இன்று இலங்கைக்கு ஆப்புவைததிருக்கின்றன.

வெளிநாட்டு ஊடகமான சனல் 4 ஊடகம் இலங்கையில் இனப்படுகொலை தொடர்பான சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்தி இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக முன்னிலைப்படுத்தியிருக்கிறது. இதற்கான ஆதாரங்களை அந்த ஊடகம் வெளியிட்டிருக்கிறது, வெளியிட்டு வருகிறது.




பெண்விடுதலைக்காக போராடும் உலக அமைப்புக்கள் அனைத்தும் இதுவிடயத்தில் கருத்தில் கொண்டு இலங்கை இராணுவத்துக் குத்தக்க தண்டனை பெற்றுக் கொடுக்க வலியுறுத்த வேண்டும். இலங்கையில் இடம் பெற்ற மனித பேரவலம் இனி எங்கும் ஏற்படா மல் இருப் பதை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.


****
யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இசைப்பிரியா 1981 மே மாதம் 02ஆம் திகதி பிறந்தவர். இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா. வேம்படி இந்து மகளிர் பாடசாலையில் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக  1996இல் இடம்பெயர்ந்து மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வியை தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் தனது கல்வியை இடைநிறுத்தி ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். ஈழத்தின் அழகி என்று சொல்லத்தக்க வகையில் ஈழப் பெண்களின் அழகின் குறியீடான தோற்றத்தைக் கொண்டவர். மென்மையும் இரக்கமும் குளிர்ந்த இலட்சியப் பாங்கும் கொண்ட இசைப்பிரியா ஈழத்து மக்களுக்கு நடந்த அநீதிகளை கண்டு போராட வேண்டும் என்று தன் இளவயதில் போராட்டத்தில் இணைந்தவர்.

Post Comment

கருத்துகள் இல்லை: