புதன், நவம்பர் 13, 2013

கழிப்பறையைக் கழுவும் கைகள்

இந்த பதிவு யாரையும் தனிப்பட்டவகையில் புண்படுத்துவதற்கானதல்ல.நிலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத நிலையில்(அச்சுறுத்தல்,நெருக்கடி காரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும்) புலத்தில் தொழில்தேடி இன்னல்படும் எம்மவர்பற்றிய சிறு பதிவே.
மூன்றாம் உலகநாடுகள் என்று இன்று எந்த நாடுகளும் இல்லை.அனைத்துமே ஏதோ ஒருவகையில் வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கின்றன.எனவே அவற்றை மூன்றாம் உலக நாடுகள் என்று குறிப்பிட முடியாது என்று அபிவிருத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாவனையிலும் இன்று மூன்றாம் உலகநாடுகள் என்று பாவிக்கப்படுவதும் இல்லை என்று சொல்லலாம்.
அபிவிருத்தி சுட்டிகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புக்கள் உயர் நிலையில் காட்டப்பட்டாலும் இன்றளவும் மூன்றாம் உலகநாடுகளில் மனிதனின் சுதந்திரமான வாழ்வுக்கு ஒவ்வாத நாடுகளும் இருக்கவே செய்கின்றன.
போதிய வருமானம் இன்மை,போக்குவரத்து,அடிப்படை வசதிகள்இன்மை,பாதுகாப்பு மற்றும் புறக்காரணிகளின் அழுத்தம்,சமூக அந்தஸ்து குறைவு போன்றவை இந்த நாடுகளை மூன்றாம் உலகத்தி லேயே வைத்திருக்கின்றன.

இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்று பட்டியலிடப்பட்டிருந்தாலும் உள்ளக அசைவுகளை வைத்துப்பார்த்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னேற்றத்துக்கான வாய்ப்புக்கள் உண்மைச்சுட்டிகள் வாயிலாக காட்டப்படுவதில்லை. உலக ஒப்பனைக்காக அறிக்கை இடப்பட்ட சம்பவங்களையே காணலாம்.

போதிய சம்பளம் இல்லை. பொருள்களின் விலை வாசி கட்டுப்பாடு இன்றி அதிகரிக்கப்படுகிறது, சுயதொழி லுக்கு உத்தரவாதம் இல்லை. 
விவசாயிகளுக்கு சரியான காப்பீட்டு வசதிகள் இல்லை. மீனவர்களுக்கு பாதுகாப்பு, தொழில் ஊக்குவிப்பு முழுமைப்படுத்தப்படவில்லை. மற்றும் இதர தொழில்களையும் உத்தரவாதம் இன்றியே செய்யவேண்டியிருக்கிறது.
இதனூடான வருமானம் போதாமைகாரணமாக வசதிபடைத்தவர்கள் என்று ஐந்து பத்து வருடங்களுக்கு முன் அறியப்பட்டவர்களும் இன்று கஷ்டம் என்று கைவிரிப்பதையே அவதானிக்கமுடிகிறது.

உழைக்க வெளிநாடு
இந்த காரணிகள் மக்களை வேறு நாடுகளுக்கு விரட்டும் தள்ளுவிசைகளாக இருக்கின்றன. வெளிநாடு களுக்கு சென்றால் உழைத்துச் சம்பாதிக்கலாம், வீட்டு வறுமையைப் போக்கலாம், சகோதரங்களை ,தாய் தந்தையை  கவனிக்கலாம் என்ற எண்ணப்பாட்டை மறுபுறத்தில் வெளிநாட்டு இழுவிசைக் காரணிகள் பார்த்துக்கொள்கின்றன.

பெரும்பாலும் கடந்த பத்து இருபது வருடங்களுக்கு முதல் வெளிநாடு சென்றவர்கள் ஆகக் குறைந்தபட்சம் வெளியில் சொல்லக்கூடிய வேலை செய்கின்றனர். அல்லது அந்த நாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அந்த நாட்டின் கல்வித் தகமைகளைப் பெற்று நல்ல உத்தியோகம் செய்கின்றனர். இவர்கள் சிரமம் பாராது உழைத்து தமது உறவுகளுக்கு காசு அனுப்ப,அதை கண்கடை தெரியாது இங்கிருப்பவர்கள் செலவளிப்பதைப் பார்க்க,வெளிநாட்டு மோகம் தானாகவே வந்துவிடும்.

""வெளிநாட்டுக்கு போனா நாங்களும் இப்படி வாழலாம்'' என்ற பதிவு பலரிடம் உருவாக கடன்பட்டு கஸ்டப்பட்டு இருக்கும் காணியை,வீட்டை வித்து வெளிநாடு செல்லும் அளவுக்கு அந்த மோகம் உருவெடுத்திருக்கிறது.

காசை அள்ளலாமா?
வெளிநாட்டில் காசு மரத்தில் காய்ப்பதில்லை. இலை உதிர்கால மரங்கள் சிந்தும் இலைகளும் இல்லை. வெளியில் சொல்ல முடியாத உழைப்பே அவை. வெளிநாட்டில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளரும் மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அந்த பணத்தை பார்க்க முடியும். ஓய்வில்லை. ஆறுதலுக்கு அயலில்யாரும் இல்லை.நோய் நொடி என்றால் கவனிக்க காக்கா கூட இல்லை. இயந்திரமாய் இயங்கவேண்டும். பெரிய படிப்பு படித்தவனும் பத்தாம் தரம் படித்தவனும் ஓரே வேலை தான் செய்யவேண்டும்.
பெரும்பாலான வெளிநாடுகளில் தற்போது வேலை இல்லை என்றாகி விட்டது. அப்படி இல்லை என்றால் மிகவும் அடிமட்ட வேலையே  செய்யவேண்டும்.

நீங்கள் தயாரா?
வீட்டு வளவில் குலை போட்டிருக்கிறது வாழைமரம். இடைப்பழமும் பழுத்துவிடது.விட்டால் காகம் குருவி கொந்திவிடும்.எப்படியாவது அதை வெட்டிப் பக்கத்துக் கடையில் கொடுத்தால் ஒரு 600 ரூபாவாவது தேறும். ஆனால் வீட்டில் இருக்கும் மகன் அதை கடைக்கு கொண்டுபோக வெட்கப்படுகிறார்.

அருகில் இருக்கம் கடைக்கு கைப்பை கொண்டு சென்று பொருள்வாங்க வெட்கம்.கடைக்காரன் போட்டுக்கொடுத்த சொப்பிங் பை வழியில் அறுத்துவிழ வழி நெடுகிலும்,வாங்கிவந்த பொருள்களை வீசிவிட்டு செல்கிறான் பையன்.
இப்படி எங்கள் கெளரவம் வெட்கம் எல்லாம் எங்கள் வீட்டுப் படலையுடன் முடிந்துவிட்டது.

வெளிநாட்டுத் தம்பி
வீட்டுக்குள் ராஜ்ஜியம் செய்த தம்பி வெளிநாட்டுக்கு செல்கிறான்.அந்த நாட்டுக்குள் வாழ்வதற்காக அவன் பெறும் அவஸ்தை இங்கே மறைக்கப்படுகிறது. சொல்லவருவது வேறை விடயம் என்பதால்.
"அரசாங்கத்திட்ட பதிஞ்சா கொஞ்ச காசு தருவாங்க. மற்றபடி வேலை ஒண்டு தேடணும்.'' தெரியாத ஆட்கள். புதிய இடம்.எத்தனை இடர்கள். இன்னும் தம்பிக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி.அறிமுகமாகும் நபர்,"தம்பி இங்க ஹோட்டல்களிலதான் வேலை இருக்கு'' என்கிறார். தம்பி சொல்கிறார். "பரவாயில்லை எங்க எண்டாலும் என்ன வேலை எண்டாலும் ஒண்டு அரேஞ் பண்ணித்தாங்கோ'' என்று.

இதுவரை வீட்டில் "அதில கிடக்கிற பொருளை இதில தூக்கிப்போடாத தம்பி' இப்போ எது வேலை எண்டாலும் பரவாயில்லை எண்டு மாறிட்டான். ஹோட்டல் உதவியாளராக சேரும் தம்பிக்கு முதலில் சாப்பிட்ட கோப்பை கழுவும் வேலை.அந்த ஹோட்டலில இருக்கிற கழிப்பறையையும் அவ்வப்போது சுத்திகரிக்க வேண்டும். தம்பி தனது ஊர் வாழ்வு பற்றி யோசிக்கிறார். கண்ணீர் கழுவுகிறது கழிப்பறையை.

இப்படித்தான் பலரது வேலை கழிகிறது. வெள்ளைக் காரன் செய்த வேண்டா வேலையால் நாடும் உரிமை யும் இழந்த தமிழன் வெள்ளைக்காரனுக்கே சேவகம் செய்கிறான்.கிட்டத்தட்ட இது இழிசேவகம்தான். எங்கள் நாடு அந்தளவுக்கு எங்களை ஆக்கிவிட்டிருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து உங்கள் உறவுகள் அனுப்புவது பணம் அல்ல. அக்கரைப் பச்சைக் கனவுகளில் மிதப்பவர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பூமுகன்
நன்றி சுடர் ஒளி 

Post Comment

கருத்துகள் இல்லை: