திங்கள், ஜூன் 04, 2012

முறிகண்டிப் பிள்ளையார் யாருக்கு சொந்தமாவார்?


01 இந்து மயத்தை  எவரும் பின்பற்ற  முடியாது எனக் கருதப்பட்ட காலத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றுக்கு பிரிட்டிஷ் விக்ரோரியா மாகாராணியே நன்கொடையாக ஆறு பேர்ச் நிலப்பரப்பை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்பது அந்தக் கடவுளின் புதுமையே.

02 செல்லப்பா கோயிலின் முழு உரிமையையும் பெற பொன்னுத்துரைக்கு எதிராக 1944 இல் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்.
எனினும் அது வெற்றிபெறாத நிலையில் பொன்னுத்துரை மனமுவந்து ஒரு பங்கை அவருக்குக் கொடுத்திருந்தார்.

03 விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்துமா மன்றம் கோயிலைப் பெறுப்பேற்றுள்ள நிலையில் பரம்பரை வழிவந்த மணிவண்ணன் என்பவர் கோயிலின் உரிமைகோரி இப்போது வழக்குத் தொடர்ந்துள்ளார்.


"அதில இறங்கி ஒரு கச்சான் பை என்றாலும் வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம் தானே அது ஒரு புதுமையான கடவுள். கும்பிட்டதாகவும் போச்சுது.''
வன்னியில் மட்டுமல்ல ஏ9 வீதியைக் கடந்து வவுனியா நோக்கியோ, யாழ்ப்பாணம் நோக்கியோ செல்லும் பலர் அந்தக் கோயில் மீதான நம்பிக் கையையும் அங்கே விற்கப்படும் கச்சானுக்கான மவுசையும் என்றும் நினைவில் வைத்திருந்தனர்.
இற்றைக்கு 92 வருடங்கள் பழமையான அந்தக் கோயிலின் வரலாறு வெள்ளையர்களால் எழுதப்பட்டது எனலாம். பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக நிலைகொண்டிருந்த அந்தக் காலத்தில், இந்து மயத்தைப் எவரும் பின்பற்ற முடியாது எனக் கருதப்பட்ட காலத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றுக்கு பிரிட்டிஷ் விக்ரோறியா மாகாராணியே நன்கொடையாக ஆறு பேர்ச் நிலப்பரப்பை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்பது அந்தக் கடவுளின் புதுமையே.
றோட்டு வேலை, காட்டில் மரம் வெட்டுதல், புகையிரதப் பாதை அமைப்புப் போன்ற பணி களுக்காகத் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களும், வடபகுதியைச் சேர்ந்தவர்களும் முறிகண்டியை அண்டிய காட்டுப் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. வேலைகளை இலகுபடுத்துவதற்காகவும் குடி தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அந்தக் காலத்தில் மூன்று கிலோமீற்றருக்கு ஒரு கிணறு என்ற கணக்கில் கிணறுகள் வெட்டப்பட்டன. அப்போது முறிகண்டிப் பகுதியில் வெட்டப்பட்ட கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பிள்ளையார் வடிவிலான கல் ஒன்றை பாலை மரத்தின் கீழ் வைத்து வழிபடத் தொடங்கினர் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த சிலர். கிணறு கோயிலுக்குக் கிழக்குப் பக்கமாக ஆறு அடி சுற்றுவட்டத்தில் இப்போதும் உள்ளது. எந்தக் கோடை காலத்திலும் நீர்வற்றாத, ஆழம் குறைந்த கிணறாகவே அது காணப்படுகிறது.
பின்னர் பிள்ளையாருக்கு ஒரு சிறிய கொட்டகை அமைக்கப் பட்டது. இதைக் கேள்வியுற்ற வெள்ளைக்காரர்கள் அங்கு சென்று அந்தச் சிலையை அகற்றி விட்டுப் பாலை மரத்தைத் தறிக்க முற்பட்ட வேளை அந்த மரத்தில் இருந்து இரத்தம் கொட்டியதாக வும் இதனை விக்ரோறியா மகா ராணிக்கு அவர்கள் தெரியப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதிர்ச்சியுற்ற விக்ரோறியா மகாராணி அந்தப் பாலை மரத்தைத் தறிக்கத் தடை விதித்த துடன் அந்த இடத்தில் பிள்ளையாரைத் தொடர்ந்து வழிபட வதியாக ஆறு பேர்ச் நிலத்தையும் அன்பளிப்புச் செய்தாராம்.
இதன்போது கோயிலைப் பராமரிக்கத் தொடங்கினார் சின்னட்டியார் என்பவர். இவர் அந்தப் பகுதியில் நீர்ப்பானத் திணைக்கள ஓவசியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். சின்னட்டியார் திருமணம் செய்யாததால் அவருக்கு வயது செல்ல அவரது மருகனான பொன்னுத்துரை என்பவருக்குக் கோயிலின் உரிமத்தை மாற்றிக் கொடுத்தார்.
1940 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாம் உலகப் போர் மூண்டிருந்த காலத்தில் சின்னட்டியாரின் தம்பியாரான செல்லப்பா என்பவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்தார். இதன்போது முறிகண்டிக்கு வந்த அவர், தனது அண்ணனின் கோயிலை அவதானித்து அதன் வருவாயில் கண்வைத்துள்ளார்.
பொன்னுத்துரையின் உரிமத்தைத் தன்வம் ஆக்குவதற்காக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். எனினும் சின்னட்டியாரால் உரி மம் பொன்னுத்துரைக்கு எழுதப் பட்டதால் அதனை வாதாடி வெல்ல முடியாது போக அண்ணனின் சொத்து என்ற அடிப்படையில் பொன்னுத்துரை என்பவர் மனமுவந்து செல்லப்பாவுக்கு என்பவருக்கு ஒரு வருட பங்கைக் கொடுக்க முன்வந்தார். (பங்கு ஒருவருடம் பொன்னுத்துரைக்கும் மற்றைய வருடம் செல்லப்பாவுக்குமாக மாறிமாறி வரும்). எனினும் பொன்னுத்துரையிடம் இருக்கும் அந்தப் பங்கையும் கைப்பற்றுவதற்காக செல்லப்பா தனது மகளை (தனலட்சுமி) 1948இல் பொன்னுத்துரைக்குத் திருமணம் செய்து வைத்து அன்றைய தினமேஉரிமத்தை மாற்றி எழுதிக் கொண்டார். பின்னர் பொன்னுத்துரை 1975இல் இறந்துபோக மாவிட்டபுரம் பகுதியில் இருந்து கல்விப் பணிக்காக வன்னிக்கு வந்திருந்த அரரட்ணம் என்ற ஆசிரியர் முறிகண்டியானுக்குத் திருப்பணி செய்யத் தொடங்கினார். பின்வந்த காலப்பகுதியில் செல்லப்பாவின் ஆளுகையின் கீழ் கோயில் இருந்தது.
1990களில் முறிகண்டிக் கோயிலை விடுதலைப் புலிகள் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். கோயிலில் இருந்து கிடைக்கும் வருமானம் விடுத லைப்புலிகளால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லங்களுக்குப் பகிர்ந்த ளிக்கப்படவேண்டுமென முடிவு செய்யப்பட்டு அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டதாம். இந்தக் காலப்பகுதியில் கோயிலைச் சுற்றி கடைகளும் பிரபல்யம் ஆகின.
19 வருடங்களாக விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழி ருந்த முறிகண்டிப்பிள்ளையாரின்  உரிமம் 2009 ஆம் ஆண்டு போர் முடிந்தபின் இலங்கை இந்து மா மன்றத்தின் பெயரில் கொண்டுவரப்பட்டது.
உரிமை வழக்கு
செல்லப்பாவின் மகனான குணரட்ணம் குடும்பம் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வந்தனர். குணரட்ணம்  செல்லப்பா என்பவரின் மகன் மணிவண்ணன் (இப்போது கோயிலுக்கான உரிமம் கோருபவர்) என்பவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போர் முடிந்த பின்னர் வந்துள்ளார். இந்த நிலையில் கோயிலுக்கான உரிம வழக்கு மீண்டும் மணிவண்ணன் என்பவரால் தொடரப்பட்டுள்ளது. "முறிகண்டிப் பிள்ளையார் கோயிலைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும், பரம்பரை வழிவந்த தர்மகர்த்தா நானே'' என்று அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவேளை பிரிட்டிஷ் விக்ரோறியா மகாராணியால் வழங்கப்பட்ட காணிக்கான உரிமத்தில் பிள்ளையாருக்கு அன்பளிப்பு என்றே எழுதப்பட்டுள்ளது. அதனைப் பராமரித்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் பரம்பரை பரம்பரையாக சின்னட்டியாரின் வழிவந்தவர்கள் உரிமம் பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் இப்போதுள்ள மணிவண்ணன் என்பவரும் அந்த உரிமத்தைக் கோருகிறார் என்று முறிகண்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்தார்.
தேவேளை, கோயிலைச் சூழவுள்ள கடைகள் அவை அமைந்துள்ள காணிகளும் குத்தகை அடிப்படையில் அந்தக் காலப்பகுதியில் பெறப்பட்டவையே. எனினும் குத்தகைப் பணம் அரசுக்கு ஒழுங்குமுறையாகச் செலுத்தப்படவில்லை. அந்தக் கடைகளையும் பரம்பரை பரம்பரையாக தகப்பன், பிள்ளைகள் எனக் கடையை உரிமைகோரி நடத்தி வந்துள்ளனர். இப்போது வீதி அகலிப்பு, கடைத்தொகுதி அமைப்புப் போன்ற வேலைகளுக்கு இந்த உரிமப் பிரச்சினை நெருக்கடியாக உள்ளது. எனினும் குத்தகை நிலத்துக்கு ரியாக குத்தகை செலுத்தப்படாமையால் அதை அவர்கள் உரிமை கோர முடியாது. அந்தக் காணிகளும் அரசுடமையாகவே கருதப்படுகிறன.
9 வீதியால் முறிகண்டிப் பிள்ளையாரைக் கடந்து செல் லும்  பெரும்பாலானவர்கள் வாகனச்சாரதிகள் அனைவருமேபிள்ளையாரைத் தரிசித்து ஒரு சில நிமிடங்கள் இளைப்பாறி விட்டுச் செல்வது ஒரு மரபாக இன்றுவரை உள்ளது. நீண்ட தூரத்துக்குப் பயணம் செய்யும் பயணிகள் பிள்ளையாரை வணங்கி அங்கே விற்கப்படும் கச்சானைக் கொறித்துவிட்டு வீட்டுக்கும் வாங்கிச் செல்லும் வழக்கத்தால் "முறிகண்டிக் கச்சான்'' பிரபல்யம் ஆனது.
பொதுவாக வழிப்போக்கர் களின் தேவைகருதி உருவாகிய பிள்ளையார், அவர்களாலேயே செல்வத்தைத் திரட்டி அனாதைச் சிறுவர்களை வளர்த்து வந்தார். விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தின்போது கோயிலுக்குக் கிடைத்த வருவாய் இவ்வாறே செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இப்போது போர் நிறைவுற்று கோயில் புனரமைக்கப்பட்டு ஒரு கிராமத்துக் கோயிலாகவும், பயணிகளின் வழிபாட்டுத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் முறிகண்டிப்பிள்ளையார் உருவெடுத்துள்ளார்.
தனியாரிடம் இருந்து விடுதலைப் புலிகளிடமும் பின்னர் அவர்களிடம் இருந்து அரசிடமும் கைமாறியுள்ள உரிமத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் தனியார் ஒருவரின் முயற்சி, அனாதைகளாக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவா என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன. 1948இல் கோயிலின் முழு உரிமத்தையும் பெறுவதற்காக தனது மகளைச் செல்லப்பா பொன்னுத் துரைக்குத் திருமணம் செய்து வைத்தார். அதன்மூலம் கோயிலின் வருவாயை அவரே முழுமை யாக்கிக் கொண்டார். இதுபோவே மணிவண்ணனும் கோயிலின் வரு வாயை உரிமையாக்கிக் கொள்ளவே பரம்பரைச் சொத்து என வழக்குத் தொடர்ந்துள்ளார் என ஊர் மக்கள் குற்றம் சாட்டாத படிக்குப் பார்த்துக் கொண்டால் நல்லது.
எது எப்படியாயினும் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இதன் போதோ அல்லது ஓரிரு தவ ணைகளின் பின்னரோ முறிகண்டியாரைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு என்பது தெளிவாகிவிடும்.
*
நன்றி-சூரியகாந்தி (03.06.2012)

Post Comment

கருத்துகள் இல்லை: