புதன், பிப்ரவரி 13, 2013

புலிகளின் மீள் எழுச்சி எந்த நாட்டில்? ஐயுறும் அமெரிக்கா

""விடுதலைப்புலிகள் 2009 மே மாதம் இலங்கையில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களது சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிவருகிறது. இலங்கையில் இப்போதைக்கு புலிகள் மீண்டெழுவதற்கு வாய்ப்பில்லை எனினும் அவர்களது சர்வதேச நடவடிக்கைகள் இன்னமும் வளர்ச்சி கண்டுள்ளது''.

இப்படி அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவால்  விடுக்கப்பட்ட 2011ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா விடுதலைப் புலிகளை 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை அந்த தடைச் சட்டம் நீடிக்கப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்காவின் சர்வதேச குடியேற்ற மற்றும் குடியுரிமை சட்டத்தின்  பிரிவு 219 இன் கீழ் பயங்கரவாத அமைப்புகளாக நிறுவப்படுகின்றன. இந்தச் சட்டமானது பயங்கரவாதத்துக்கு எதிரான முக்கியமான செயற்பாட்டு அலகைக் கொண்டுள்ளது. அதாவது பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையாக அது கொள்ளப்படுகின்றது.

ஒரு பயங்கரவாத அமைப்பு தடைசெய்யப்படுவதற்கு அது ஒரு வெளிநாட்டு அமைப்பாக இருத்தல், மேற்படி சட்டத்தின் அமைப்புப் பிரிவு 212இன் (ச்)(3)(ஆ)சட்டத்தின் கீழ்  பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டிருத்தல், ஐக்கிய அமெரிக்காவுக்கு அந்த அமைப்புக்களால் அச்சுறுத்தல் இருத்தல் அல்லது தேசிய அல்லது தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பொருளாதார நலன் ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைவித்தல் போன்ற செயற்பாடுகளைக் கொண்டிருக்கவேண்டும்.
இவ்வாறான மூன்று முக்கிய அடிப்படைக் காரணங்களைக் கொண்டு உலக அளவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிடப்படுகின்றன.

2011ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் அறிக்கையில், ""2009வரை விடுதலைப்புலிகள் போர்க்களத்தில் இராணுவப் பலத்துடன் இருந்தனர். இந்தக் காலப் பகுதிகளில் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத் தலைவர்கள் இவர்களால் இலக்குவைக்கப்பட்டு தாக்குதலுக்கும் இலக்கானார்கள். இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை (1993), இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாஸவின் கொலை(1991) ஆகிய முக்கிய குற்றச்சாட்டுக்கள் புலிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
""இதன்பின்னர் விடுதலைப்புலிகள் நீர், நிலம், வான் வழிப் படைகளாக மாற்றம் பெற்று ஒரு இராணுவப் பலத்தை தமக்குள் உருவாக்கிக் கொண்டனர். 2006 2008 வரை அவர்களது பலம் வியப்புக்குள்ளானதாகக் கருதப்பட்டது.

""2009இல் போர் உக்கிரமடைந்து விடுதலைப்புலிகளின் இராணுவப்பலம் சிதைக்கப்பட்டு அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தனது போர் வெற்றியை அறிவித்தது. இதன் பின்னர் எஞ்சிய விடுதலைப்புலிகள் வேறு நாடுகளுக்கு தப்பியோடி தமது மீள் இணைவுக்கு ஒன்றிணையும் முயற்சியில் ஈடுபடுவதாக அறிவிக்கப்படுகிறது. 2010 ஜூன் மாதம் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
""இதேபோல 2010 மார்ச் மாதம் ஜேர்மனியில் 6 தமிழர்கள் ஜேர்மனிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

""தவிர புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மீள் இணைவுக்குத் தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா கருதுகிறது. எது எவ்வாறாகினும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் உள்ளாகியுள்ளனர். அவர்கள் மத்தியில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் சொற்ப காலத்துக்குள் உருவெடுக்க சாதகமான எந்தவொரு வாய்ப்பும் இல்லை. இப்போது அந்தப் புலம் அதுக்கு வாய்ப்பானதாகவும் இல்லை என அமெரிக்கா கருதுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் தடை

விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக தடைசெய்துள்ள இந்திய அரசு அந்த அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அதன் மீதான தடையை மீண்டும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளது.

ஏற்கனவே விடுதலைப்புலிகள் இந்தியாவில் அணிதிரள வாய்ப்பிருப்பதாக கருத்துக்கள் எழுந்த போது இந்தியாவுக்குள் விடுதலைப்புலிகள் மீள் இணைவதற்கு எந்தவிதமான சாதக வாய்ப்புக்களும் இல்லை என இந்திய அரசு அறிவித்தது. அத்தோடு ஈழத் தமிழர் முகாம்கள் அவதானிக்கப்படுவதோடு தமிழகத்தின்   விடுதலைப்புலிகள் சார்பு அரசியல் கட்சிகளையும் தமது புலனாய்வுப்பிரிவு அவதானித்து வருவதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இந்தியாவில் மீள் இணைவதற்கான சாத்தியம் இருப்பது என்பது வதந்தியான விடயம் என்றே கருதப்படுகின்றது.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படும் விடுதலைப் புலிகள் அந்தந்த நாடுகளில் தாம் சார்ந்த குழுக்களை உருவாக்கி, ஏற்கனவே செயற்பட்டுவந்த குழுவினருடன் இணைந்து இப்போதும் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 2011ஆம் ஆண்டு முழுவதும் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கை சர்வதேச மட்டத்தில் பரந்த அளவில் நடைபெற்றுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது.
விடுதலைப்புலிகளுக்கு ஏன் நிதி?

நிலத்தில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புலத்தில் ஏன் நிதி சேகரிக்கப்படுகிறது? போரின்போதும் அதற்கு முன்னரும் சேர்க்கப்பட்ட நிதி விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்புக்கு ஏன் நிதி தேவைப்படுகிறது? இந்தக் கேள்வியே புலிகளின் மீள் இணைவு குறித்த எதிர்பார்ப்புக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதாவது அந்த அமைப்பு வெளிநாடுகளில் எங்காவது மீள இணைவதற்கு சாத்தியம் இருப்பதாகவே கருதப்படுகிறது. அதேநேரம் அது வடக்கு, கிழக்கில் இப்போதைக்கு சாத்தியம் இல்லை என அமெரிக்கா மறுதலிக்கிறது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் தொடர் இயக்கத்தையே இப்பொழுது அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அதே நேரம் அமெரிக்காவின் இலங்கை மீதான வெளியுறவுக் கொள்கை இலங்கை ஒரு ஜனநாயக நாடு, அங்கு இருவேறு நாடுகள் தோன்றுவதற்கு இடமில்லை, அவ்வாறானதொரு தோற்றப்பாட்டுக்கு அமெரிக்கா ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதாகவே இருக்கிறது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் பற்றிசியா புட்ணிஸ் "உதயனுக்கு' அளித்த நேர்காணலில் இதனைத்  திடமாகத் தெரிவித்திருந்தார்.

புலிகள் இயக்கம் இலங்கையில் உடனடியாக மீள் உருவாக்கம் பெற வாய்ப்பில்லை என்றும், அவர்களின் தனிநாட்டு வேணவாவை ஒரு போதும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறும் அமெரிக்கா புலிகள் தொடர்ந்து நிதி சேகரித்து வருகிறார்கள் என்று கூறி அதன் மீது தடைவிதிப்பதன் மூலம் சொல்லவரும் செய்தி என்ன என்பது விரிவான ஆய்வுக்குரியது.

நிதியைத் திரட்டிக் கொண்டு இலங்கைக்கு வெளியே ஒரு நாட்டில் புலிகள் இயக்கம் ஒருங்கிணையலாம் என்கிற எச்சரிக்கையே அது. இந்தியா அதற்குச் சாதகமான நாடாக இருக்கலாம் என்றும் அமெரிக்கா தனது அறிக்கையில் கோடிகாட்டுகின்றது. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டை இந்தியா ஏற்கனவே மறுத்துவிட்டது.
அப்படியானால் புலிகள் எந்த நாட்டில் ஒன்றிணைகிறார்கள்? அல்லது ஒன்றிணைவார்கள்?

தமிழர்கள் புலம்பெயர்ந்து 10இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்து வாழும் நிலையில், அவற்றில் ஏதாவது ஒன்றில் புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுமா? அல்லது இலங்கையை அண்டிய ஒரு நாட்டில் அதன் புனரமைப்பு இடம்பெறுமா?

இதுதான் இன்று மில்லியன் டொலர் கேள்வி. தன்னை புலிகளின் தீவிர ஆதரவாளராக உதயனுக்கு வெளிக்காட்டிக் கொண்ட நபர் ஒருவர், வெளிநாடு ஒன்றில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவிக்கையில், ""நாங்கள் தயாராகிக் கொண்டுதான் இருக்கின்றோம். விரைவில் வருவோம்'' என்றார். இதிலுள்ள உண்மை பொய்களை அவரும், ஆண்டவனும் மட்டுமே அறிவர்.  
--

அமெரிக்க அரசின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு 
பட்டியலிட்டுள்ள பயங்கரவாத அமைப்புக்கள்
அபுநிடல் அமைப்பு (AMO)
அபு சயாப் குழு அல்அசா மாட்டைர்ஸ் பிரிகேட் (ASG)
அன்சார் அல்ஸ்லாம் இஸ்லாமிய இராணுவம் (AAMB)
அஸ்பத் அல்அன்சர் (AAI)
ஒம் சின்றிக்கியோ  (AOI)
பாஸ்கியூ பாதர்லான் அன்ட் லிபேட்ரி(AAA)
பிலிப்பைன்ஸ் புதிய மக்கள் இராணுவ கமியுனிஸ் கட்சி (AUM)
ஐரிஸ் குடியரசு இராணுவம் (ETA)
ஹமா அல்ஸ்லாமியா (CPP/NPA)
ஹமாஸ், ஹரகத் உல்ஜிகாத்ஐஸ்லாமி (CIRA)
பங்களாதேஷ் ஹரகத் உல்ஜிகாத்ஐஸ்லாமி (IG)
ஹரகத் உல் முஜாகுதீன் (HUJI)
ஹிஸ்புல்லா, இந்தியன் முஜாகுதீன் (HUJI-B)
இஸ்லாமிக் ஜிகாத் யூனியன் (HUM)
உஸ்பகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (IM)\
ஜெய்ஸ்ஈமுகமட் (IJU)
ஜிம்மா இஸ்லாமிய (IMU)
ஜுந்தலா, ஹகனே சை, கடாபி ஹிஸ்புல்லா (KH)
கேடிஸ்ரன் வேக்கேர்ஸ் பாட்டி (PKK)
லஸ்கர் ஈதெய்பா  (LT)
லஸ்கர் ஐ ஜாங்வி  (LJ)
தமிழீழ விடுதலைப்புலிகள்  (LTTE)
லிபிய ஸ்லாமிய போர்க்குழு (LIFG)
மொறோக்கோ ஸ்லாமியப் போராளிக் குழு (GICM)
முஜாகுதீன் ஈ ஹால்க் அமைப்பு  (MEK)
தேசிய விடுதலை இராணுவம் (ELN)
பலஸ்தீன் இஸ்லாமிய ஜகாத் (PIJ)
பலஸ்தீன விடுதலை முன்னணி (PLF)
பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (PFLP)
பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி பொதுக்கட்டளை (PFLP-GC)
அல்குவைதா (அகி), அரேபிய தீபகர்ப்ப அல்குவைதா  (AQAP)
ஈராக்கிய அல்குவைதா (AQI)
இஸ்லாமிய மெக்ரப் அல்குவைதா (AQIM)
ரியல் ஈரா  (RIRA)
கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படை(FARC)
நவம்பர் 17 புரட்சிகர அமைப்பு  (17N)
புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி (DHKP)
புரட்சிகர போராட்டக் குழு (RS)
அல்ஷபாப்  (AS)
ஒளிரும் பாதை  (SL)
பாகிஸ்தான் தெஹ்ரிஈ தலிபான்  (TTP)
கொலம்பிய ஐக்கிய தற்காப்புப்படை (AUC)

ஆகிய 44அமைப்புக்களேதடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது.
05.08.2012

Post Comment

கருத்துகள் இல்லை: