புதன், பிப்ரவரி 13, 2013

தொலைந்துபோனோர் பற்றி கவலையுறும் ஐ.சி.ஆர்.சி.

வடக்குகிழக்கில் 1990 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில் 15,780 பேர் காணா மல் போயுள்ளனர். இவர்களில் 751 பேர் பெண்கள், 1494 சிறுவர்கள்.




மனிதாபிமான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு பகுதி மக்களுக்குப் புறக்கணிக் கப்பட்டிருந்தது அல்லது வரையறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையான மக்கள் பல் வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டதுடன் தீராத பிரச்சினையாக இன்றுவரை அவர்களுக்கு அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் அதன்பின்னரான காலத்திலும் சர்வதேச தன்னார்வத் தொண்டு அமைப்புகள் வடக்கு, கிழக்குப் பகுதியில் மனிதாபிமான மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் அதன் சுதந்திரம் மட்டுப்படுத் தப்பட்டதாகவே இருந்தது. இந்த மட்டுப்பாடு பின்வந்த காலத்தில் சில அமைப்புகளுக்கு முற்றாக மறுக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த அமைப்புகள் தமது நடவடிக்கைகளைக் குறுக்கி அல்லது கைவிட்டுச் சென்றன. இதன் விளைவுகள் தமிழ் மக்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.
இன்றுவரை தொலைந்து போன தனது பிள்ளையைத் தேடித் தாயும் கணவனைத் தேடி மனைவியும் என்று உறவுகளைப் பிரிந்த அவலத்தில் பல்வேறு தரப்பினரிடம் கையேந்தி நிற்கின்றனர். வீதியில் இறங்கிப் போராடு கின்றனர். இருந்தபோதும் பொறுப்பான நம்பகத் தன்மையான பதில் ஏதும் இவர்களுக்கு எட்டுவதாக இல்லை. தொலைந்தவர்கள் தொலைந்தவர்களாகவும் தேடுபவர்கள் தேடுபவர்களாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அரசின் வற்புறுத்தல் காரணமாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தனது பணியை நிறுத்த வேண்டி ஏற்பட்டது. குறிப்பாக 1990 களில் இருந்து வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மனிதாபிமான பணியாற்றி வந்த இந்த அமைப்பு அதனைக் குறுக்கி கொழும்புக்குச் சென்றது. இருந்த போதும் அந்த அமைப்புத் தனக்குக் கிடைத்த தரவுகளின்படி தேடுதல் முயற்சியைக் கைவிடவில்லை. ஆனால் தேடுதலுக்கான களம் குறுக்கப்பட்ட நிலையில் அது தனது பணியைப் பூரணப்படுத்த முடிய வில்லை. இவ்வாறான நிலையி லேயே கடந்த ஆண்டுக்கான தனது ஆண்டறிக்கையில் இலங்கையில் காணாமற்போனோர் தொடர் பிலான தனது கவலையை வெளி யிட்டுள்ளது.
ஐ.சி.ஆர்.சி.அறிக்கை
வன்னியில்  இறுதிப் போர் முடி வடைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில்  காணாமல் போயிருந்த 15,000 இற்கும் அதிகமான பொது மக்களது நிலைமை இன்னும் தெரியவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற செய்தி இன்றுவரை தெரியாதுள்ளது என்று சர்வதேச செஞ்சிலுவைக்குழு தனது 2011 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது. 512 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் உலகநாடுகளில் இன்றுவரை தொடரும் மனித அவலங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.  இலங்கை தொடர்பில் அந்த அமைப்பு கவலையான ஒரு கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக  1990 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து (குறிப்பாக வடக்கு, கிழக்கு)  15,780 பேர் காணாமற்போயுள்ளனர் என்றும் அவர்களின் நிலை என்னவென்று இன்றுவரை தெரியாதுள்ளது என்றும், காணாமற் போனோரின் பட்டியலில் 751 பேர் பெண்கள், 1494 சிறுவர்கள் என்றும் அந்த அமைப்பு கோடிட்டுள்ளது. இறுதிப் போரின் பின்னர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் 2,80,000 வரையான மக்கள் தங்கவைக் கப்பட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும் ஆயிரக் கணக்கானவர்கள் தொடர்ந்தும் அந்த முகாம்களிலிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  இளம் சமூ கத்தினர் பலர் தடுப்பு முகாம் களிலும் புனர்வாழ்வு மையங்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காணாமல் போனோரது நிலை குறித்துத் தகவல்களைப் பெறுவது பெரும் நெருக்கடியாகவே உள்ளது. போர் நடைபெற்ற பகுதிகளுக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்  சென்றுவருவதற் கான தடை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விலக்கிக் கொள்ளப்பட் டாலும், அந்தப் பகுதிகளுக்கு சுயாதீனமாக மனிதநேயப் பணியாளர்கள் சென்று வருவது இன்றும் அரச தரப்பால் கடுமை யான நிபந்தனைகளுக்கு உட்பட் டதாகவே அனுமதிக்கப்படுகிறது.

தடுப்பு முகாமில் இருந்து பலர் கடந்த ஆண்டின் இறுதியில் விடுவிக்கப்பட்டனர். போர் நடைபெற்ற காலத்திலும், அது முடிவடைந்த உடனடிக் காலப் பகுதியிலும் தமது உறவுகளுடன் தொடர்புகளை இழந்த ஆயிரக் கணக்கானவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் முறைப்பாடு செய்து தமது உறவுகளுடன் இணைந்து கொண்டனர். ஆனாலும் அந்த நடவடிக்கை முழுமை பெற வில்லை. இதற்குக் காரணமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் துரதிஷ்டமாக வெளியேறிய சம்பவம் அமைந்துள்ளது. பிரிந்து போயுள்ள குடும்பங்களின் நிலை குறித்தும் அவர்களை மீள இணைப்பது குறித்தும் பாதுகாப்பு அமைச்சுடன் எமது அமைப்புத் தொடர்ந்து பேசி வருகிறது என்று அந்த அமைப்பு தனது நீண்ட அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறது.

இலங்கையில் ஐ.சி.ஆர்.சி.

இலங்கையில் ஐ.சி.ஆர்.சி. 1980ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கியது. ஆயுதமோதல்களின் போது மத்தியஸ்தம் வகிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, கைதிகள், போர்க் கைதிக ளின் பரிமாற்றம், குடும்ப உறவுகளுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்துவது, குடியுரிமை சமூ கத்தின் பாதுகாப்பு, வன்முறை களால் பாதிக்கப்பட்டவர்களுக் கான மறுவாழ்வு, விசேட கள மருத்துவ சேவை போன்ற பல்வேறு சேவைகளை வடக்கு, கிழக்கு பகுதி உட்பட இலங்கையின் பல பாகங்களுக்கும் பரவலாக்கியி ருந்தது.

குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உயிர் அர்ப்பணிப்பு டன் ஐ.சி.ஆர்.சி. தனது சேவையை வழங்கியிருந்தது. ஓமந்தை சோத னைச் சாவடியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக் கும் இடையிலான சூனியப் பிர தேசத்தில் மத்தியஸ்தம் வகித் தமை அந்த அமைப்பின் முக்கிய மான பணியாக அமைந்தது. தவிர 2009 இறுதிப் போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் மருத்துவமனைகள் இலங்கை இராணுவத்தின் வான்தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மக்களுக்கான அவசர மருத்துவ சேவை முற்றாகத் தடைப்பட்ட வேளை தனது கப்பல் சேவை மூலம் இயலுமானவரை மக்களுக்கு உயிர்க்காப்பு வழங்கியது.
இவ்வாறான மனித நேய மனிதாபிமானப் பணிகளின் தொடர்ச்சி போரின் போது காணாமற்போனோரைத் தேடியறியும் பணி வரை விரிவாக்கப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட சில நாள்களுடன் வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்து தனது சேவையைக் குறுக்க வேண்டிய நிலை ஐ.சி.ஆர்.சிக்கு ஏற்பட்டது.

1990ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் சேவையாற்றி வந்த இலங்கை செஞ்சிலுவைக்குழு 2011.02.24ஆம் திகதியுடன் தனது பணியை நிறுத்திக் கொண்டது. இதேபோல 13 வருடங்களாக வவுனியாவில் சேவை யாற்றிய ஐ.சி.ஆர்.சி. 2011 மார்ச்சில் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. இதேபோல நோர்வே செஞ்சிலுவைச் சங்கமும் மார்ச் 2012இல் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்துக்கு ஆறுதலாக இருந்த அமைப்பு இடைநடுவில் விட்டுச் சென்றது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஏ9 சாலை துண்டிக்கப்பட்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐ.சி.ஆர்.சி. தன்னாலான சேவைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.

இதேபோல் வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் தொடர்பிலும் வெளியிடங்களில் இருந்த மக்கள் தொடர்பிலும் தகவல்களைப் பெற்று, பிரிந்து வாழ்பவர்களை இணைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்தது. அத்தோடு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பிலான விவரங்களையும் சேகரித்தது. போர் முடிவுற்ற பின்னரான காலப் பகுதியில் வவுனியாவில் இயங்கிய ஐ.சி.ஆர்.சி. மக்கள் கூட்டத்தால் எந்த நேரமும் நிரம்பியிருந்தது. குறிப்பாகத் தமது உறவுகளைத் தேடித்தருமாறு அங்கு பலர் மண்டியிட்டிருந்தனர். இந்தப் பணியின்போது பிரிந்த குடும் பங்கள் பல தமது உறவுகளோடு இணைந்து கொண்டன.

 எனினும் தொடர்ச்சியாக சேவை வழங்க முடியாத காரணத்தால் பதிவு செய்யப்பட்ட காணாமற் போனோர் சம்பந்தமான விவரங் களை எடுத்துக் கொண்டு ஐ.சி.ஆர்.சி. கொழும்புக்குச் சென்றுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஏமாற்றமே கிடைத்தது. பின்னர் அவர்கள் அரசியல் வாதிகளின் கால்களில் விழவும், இடைத் தரகர்களின் ஏமாற்று வித் தைகளுக்குத் துணைபோகவும், இலஞ்சம் பெறுபவர்களுக்கு காசைக் கரைக்கவும் கதி ஏற்பட்டது. இந்த நிலை அந்த மக்களுக்கு இன்றுவரை தொடர்கிறது. 

வீகேஎம்                           *

08.07.2012

Post Comment

கருத்துகள் இல்லை: