
சுட்ட மண்ணும் பச்சமண்ணும் ஓட்டுமா கூறப்பா, சுண்ணாம்பும் தயிரும் சேர்ந்தா திங்கிறவன் யாரப்பா' இது உணர்ச்சி கவிஞர் காசியானந்தனின் வரிகள். இரு இனங்களுக்கிடையே எந்த வகையிலும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என்பதை இந்தப் பாடல் வரிகள் எடுத் தியம்புகின்றன. இலங்கையில் இன நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற சொற்கள் இப்போது தாராளமாகப் பாவிக்கப்படுகின்றன. அறிக்கைகளிலும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் திருவாய் களிலும் இவற்றுக்குப் பஞ்சமில்லை.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கென பல்வேறு மட்டங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முக்கிய கருவியாக இராணுவத்தினர் பயன்படுத் தப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகளையும் கவனிப்பர் என ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டதுடன் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிர்வாகமும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துக்கும் இராணுவத்தின் அனுமதியும், பிரசன்னமும் அவசியமானதாகின்றது. அத்துடன் நிகழ்வுகளுக்குச் சில முன் மாதிரியானவர்களை அழைப்பதும் கட்டுப்பாடுகள் எழுதப்படாத சட்டமாகியுள்ளன.
கடந்த மாதம் கிளிநொச்சியில் இராணுவச் சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் ஜனாதிபதி செயலகத்தால் திருமணம் செய்துவைக்கப்பட்டது. இதனை இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அரசு பிரசாரப்படுத்தியது.
கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இராணுவச் சிப்பாய்க்கும், மலையாளபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியான சந்திரசேக ரன் சர்மிளாவுக்கும் ஜனாதிபதி செயலகம் இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
உண்மையில் முன்னாள் பெண் போராளியின் பெற்றோர் இனக்கலவரம் இடம்பெற்ற போது மலைநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள். இவர்களுக்கு சிங்கள மொழிபேசத் தெரியும். அதுமட்டுமல்ல தாய் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் மற்றும் நாளாந்த கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் இவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள்.
இந்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திய இராணுவச் சிப்பாய், பெண்போராளி பம்பைமடு தடுப்புமுகா மில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அவரிடத்தில் பேசிப்பழகி காதல் கொண்டுள்ளார். சற்றுச் சிங்களம் பேசத்தெரிந்த பெண் போராளியும் அதைச் சம்மதித்துள் ளார். பெண் போராளி தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கபட்டபோது இராணுவச் சிப்பாயும் கிளிநொச்சி இராணுவ முகாமுக்கு மாற்றம் பொற்றுள்ளார்.
பின்னர் போராளிப் பெண்ணின் பெற் றோருடன் இராணுவத்தினர் பேசிப்பழகி அவர்களிடத்தில் அனுமதி பெற்றுள்ளனர். தொடர்ந்து இராணுவத் தலைமை அதிகாரி ஊடாக ஜனாதிபதி செயலகம் இருவருக்கும் திருமணம் செய்துவைத்து பிரசாரத்துக்கு வாய்ப்பாக இதனைக் காட்டியுள்ளது.
அத்தோடு தமது காரியத்தை நிறுத்திவிடாத இராணுவத்தினர் கிளி. மத்திய கல்லூரியில் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் மாணவர்களை ஒன்று திரட்டி அவர்கள் மத்தியில் புதுமணத் தம்பதியரை விசேட விருந்தாளர்களாக அழைத்து அவர்களது அனுபவங்களையும் மாணவர்கள் மத்தியில் பகிரச் செய்தனர்.
அத்துடன் அவர்களைக் கௌரவிக்கு மாறும் இராணுவத்தினர் மாணவர்களைப் பணித்துள்ளனர். இவர்கள் ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவுக்குமாறும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரும் ஜனாதிபதி செயலகமும் திட்டமிட்டு செய்த இந்த நாடகத்தை தமிழ்ச் சமூகமும், மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. இதற்காக நலிந்த பிரிவு மக்களை சிங்கள ஆட்சியாளர்கள் கருவியாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சியில் இது போன்ற முயற்சிகள் பல இடம்பெற்றுவரு வதாகக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாடசாலை மாணவிகளைக் குறிவைக்கும் இராணுவத்தினர் அவர்களைத் திருமணம் செய்வதற்குச் சம்மதம் வாங்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரி விக்கப்படுகின்றது.
இராணுவ மயப்படுத்தப்பட்ட வன்னிப் பகுதியில் குற்றச் செயல்களும் பிறழ் நடத்தைகளும் அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் மத்தியில் தவறான தமிழ்க் கலாசாரத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைப் பரப்புவதும், திணிப்பதும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இது விடயத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியமாகின்றது. எத்தனை திருமணங்கள் நடந்தாலும் சுட்ட மண்ணும் பச்சமண்ணும் ஒட்டியதாக இல்லை. பிரச்சினைகளும், முரண்பாடு களும் வலுக்கவேசெய்யும்
அரசு நேரிய வழியில் சென்று அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாகக் குறுக்கு வழிகளைக் கையாண்டு தமிழ் சமூகத்தின் இருப்பைச் சீர்குலைக்க முற்படுகிறது என்பதே அவர்களது செயற்பாடுகளிலிருந்து தெளிவாகிறது. *
நன்றி-உதயன் சூரியகாந்தி (05.02.2012)
Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக