செவ்வாய், பிப்ரவரி 07, 2012

புரட்டிப் போடும் ஞாபகங்கள்


நடுஇராத்திரியும்
15வயது சிறுவனும்
பேரிரைச்சல்... ஓட ஆரம்பித்த நிகேஷ் நிற்கவே இல்லை. சத்தம் அவனையே குறிவைத்துக் கலைத்தது. பங்கருக்குள் போக அவன் தயாரில்லை. காரணம் அவனோடு நேற்றுக் காலைவரை விளை யாடிக் கொண்டிருந்த புதிய நண்பனும் அவனது குடும்பமும் பங்கருக்குள்ளேயே அன்று மாலை மாண்டுபோன ஞாபகம்.

சற்றுநேரத்திலே செவிப்பறை முழங் கும்படியாக பெரும் சத்தங்கள். மின்னல் வேகத்தில் ஏதேதோ வானைப் பிழந்தன...
சிறிதுநேர அமைதியின்பின் முனகல் சத்தமும், அழுகுரல்களும்....இரத்தமும் சதையுமான காட்சிகள்...அம்மா!! என்ற சத்தத்துடன் திடுக்கிட்டு விழித்துவிட்டான் நிகேஷ்.
இதுவரை அவனது மனம் வன்னி இறுதிப் போரின் ஒரு பகுதியை திரை யிட்டுக்கொண்டிருந்தது... காட்சிகளைப் பாரத்து சகிக்கமுடியாமல் திடுக்கிட்டு விழித்தவனுக்கு அன்றிரவு நித்திரை மீண்டும் வரவேஇல்லை.
வன்னியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 12 வயதாக இருந்தபோது நிகேஷ் எதிர்கொண்ட காட்சிகளும் துன்பங்களும் இப்போது மனதில் காட்சிகளாகப் பதியப்பட் டுள்ளன.
இடப்பெயர்வின்போது சந்தித்துக் கொண்ட அவனது நண்பனும் குடும்பத்தி னரும் விமானக் குண்டுவீச்சில் இறந்து போக, அவர்களை அந்தப் பங்கருக் குள்ளேயே போட்டுமூடிவிட்டு வேறு இடத்துக்குச் சென்றபோது நிகேசுக்கு அந்த காட்சியும் சம்பவமும் பெரிதாகப் படவில்லை. காரணம் அடுத்து எங்கள் உயிர் என்பது இந்தச் சிந்தனைகளை அவன் மத்தியிலோ அல்லது இடம் பெயர்ந்து கொண்டவர்கள் மத்தியிலோ இருந்து நீக்கியிருந்தது.
இப்போது 10ஆம் தரத்தில்படிக்கும் நிகேஷ் மூன்றேமூன்று நாள்மட்டும் பழகிய தனது நண்பன் குடும்பத்தோடு மரணித்து விட்டதை மனதில் கொண்டு திரிகிறான்.
இருந்தாலும் அம்மா! என்று அலறிக்கொண்டு நித்திரையிலிருந்து எழுந் தவனை அவனது தாயார் என்னப்பன்! என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் ஒன்றுமில்லை என்பதே.
வன்னிப்போர் முடிந்துவிட்டது. நாட்டில் அமைதி நிலை நாட்டப்பட்டுவிட்டது. தமிழ் மக்களுக்கு விமோஷனம் வந்து விட்டது என்று அரட் டிக்கொள்ளும் ஆட் சியாளர்களது கோணத்தில் நிகேஷின் கனவை எப்படிபார்ப்பது?
இப்படித்தான் தங்கள் உறவுகளை இழந்தவர்களும், தொலைத்தவர்களும், இறுதிப்போரை எதிர்கொண்டவர்களும் ஒவ்வொரு இர வையும் கழிக்கின்றனர் என்பதை எவர்தான் உணருவாரோ???
மரணச்சடங்கும்
ஒரு தாயின் புலம்பலும்
கொண்டாட்டங்கள் நடந்தால் போகா விட்டாலும் செத்தவீட்டுக்கு கட்டாயம் போகவேணும். இது எம்மில் பலபேரது அபிப்பராயம். துன்பத்தில் தோள்கொடுப் பதுதான் இந்த முயற்சியாக இருக்கவேண்டும்.
வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்த பலருக்கு விரக்தி கூட களியாட்டங்களை விலக்களிக்குமாறு பணிக்கின்றது.
வயதான ஒருவரின் மரணச் சடங்கில் ஒரு தாய் ஒப்பாரி சொல்லி அழுது கொண்டிருந்தாள். ""ஐயா! என்னவிட்டு போயிட்டியே! நான் என்னசெய்வேன்! அம்மா அழாமல் இருங்கோ நான் வந்திடுவன் எண்டு செல்லிட்டு என்னவிட்டு எங்கடா போய்ட்ட?.....'' என்று அவளின் புலம்பல்நீண்டது...
அந்த மரணச்சடங்குக்கு சம்மந்தமே இல்லாத இந்த ஒப்பாரி அவளின் மகன் போரில் கொல்லப்பட்டதையும் அவனுக்காக தான் ஒரு கடமைகூடச் செய்ய வில்லை என்பதையும் வெளிக்காட்டியது.
போருக்குப் பின்னர் எத்தனை தாய்மார் இப்படிப் புலம்புகிறார்கள் என்பதை யார் கருத்தில் கொள்கிறார்கள்?
தென்னிலங்கை அரசியல்வாதிகளும் சரி வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களும் சரி சுற்றுலா நோக்கிலேயே போர் நடைபெற்ற பகுதி களைப் பார்வையிடு கின்றனர்.

போதாக்குறைக்கு யாழ்ப்பாணம் வந்த இந்திய முன்னாள் ஜனாதி பதி அப்துல்கலாம் கூட கனவு காணுங்கள் என்று தான் சொல்லிவிட்டு சென்றார். இந்த மக்கள் காணும் கனவுகளும் , ஏக்கங்களுக்கும் எந்த வகையில் இலட்சியம் ஆவது? கனவுகளும் புலம்பல்களும் தொடர்கின்றன. தென்னிலங்கையின் கொக்கரிப்பும் தொடர்கிறது.


நன்றி-உதயன் சூரியகாந்தி (05.02.2012)

Post Comment

கருத்துகள் இல்லை: