புதன், டிசம்பர் 04, 2013

கண்துடைக்கும் இந்தியா


ஈழத்தமிழர்விடயத்தில் அயல்நாடு என்ற வகையில் இந்தியா காலத்துக்குக்காலம் தவறையே செய்துவந்திருக்கிறது. அதுமட்டு மல்லாமல் தவறுக்கான காரணங்களையும் கூறி ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதிலும் குறியாகவே இருந்துவருகிறது.
இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் ஈழத்தமிழர் விடயத்தில் இனி எந்த நற்காரியங்களும் இடம் பெறப்போவதில்லை என்ற நிலை வந்துவிட்டது. காரணம் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுதான்.
இந்திய மத்தியஅரசு தமது நிலைத்திருப்புக்காக தமிழகத்தில் தங்கியிருக்கிறது. எனவே தமிழ கத்தைச் சமாளிப்பதற்கான சாடைகளை அவ்வப்போது காட்டிக்கொண்டால்தான் அது வெற்றி பெறும்.இந்த இரட்டை நிலை அரசியல் தந்திரத்தை மிகவும் நுணுக்கமாக இந்திய மத்திய அரசு கையாண்டுவருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழக அரசியல் தலைவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதையும் மத்திய அரசு நன்கு அறிந்துவைத்திருக்கிறது. மகுடி ஊதும்வரைக்கும் ஆடும் தமிழக அரசியல் பாம்புகளை பெட்டிக்குள் மூடும் அரசியல் தந்திரம்தான் இது.

சென்னையில் கடந்த 30ஆம் திகதி "இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியினராலேயே இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனாலும் தமிழகக் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட வில்லை. இதில் இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார். அவரது உரை பல் வேறு கேள்விகளை எழுப்பி நிற்கிறது. மேடையில் நானே ஏற்பாட்டாளர். நானே நடத்துபவன். நானே பிரதம விருந்தினர். நானே பேச்சாளர். என்று பெருமை பேசிய அமைச் சர் ஈழத்தமிழர்கள் பற் றிப் பேசத் தனக்கு சந் தர்ப்பமும் மேடையும் கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டிருக்கிறார்.

சிதம்பரஞானம்
இலங்கையில் இறுதிப்போரின்போது நடைபெற்றவை இனப்படுகொலைகளே. இவைபற்றி ஒரு விரிவான, உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு உண்மையான விசாரணையாக இருக்க வேண்டும். இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு  தண்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல இந்திய இலங்கை உடன்பாடிக்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத் தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் நிலையில் இருந்தும் இந்திய அரசு ஒருநாளும் பின்வாங்காது.இலங்கையில் தமிழர்கள் தமது அரசியல் சாசன உரிமைகளை முழுமையாகப் பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என அமைச்சர் எடுத் தியம்பியிருக்கிறார்.

இந்தியா ஈழத்தமிழர்களுக் காகச் செய்த உதவிகளைவிட துரோகமே அதிகமானது என்பதால் அமைச்சரது மெஞ்ஞானக்கருத்துக்கள் எவரது காதுகளுக்கும் எட்டுவதாகவில்லை. இவைஎல்லாம் ஒரு வகைப் புலம் பலாகவே ஈழத் தமிழர்களால் பார்க்கப்படுகிறது என்பதை அமைச்சர் உணரவேண்டும்.

அமைச்சரின் மூன்று
இலங்கையில் இப்போது மூன்றுவிதமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் அந்த விடயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.
01. இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், சம உரிமை, சமஅந்தஸ்து என்பவற்றைக் கிடைக்கச்செய்வது.
02.இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து ஆழமான, நேர்மையான விசாரணை நடத்தி, அதில் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பது.
03.உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் களுக்கு, வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் பழைய இடத்திலேயே வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது.
இவற்றைச் சாத்தியமாக்குவதற்கு இந்தியா தன்னாலான முயற்சியை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் எந்தக் கூற்றும் இலங்கை அரசைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இலங்கை அரசு இதற்கு எதிரான நிகழ்ச்சி நிரலையே வைத்திருக்கிறது. அப்படி என்றால் பிள்ளையையும் நுள்ளி தொட்டிலையும் ஆட்டக்கூடிய இந்தியாவால் இவற்றை எப்படிச்சாத்தியமாக்கமுடியும் என்ற கேள்வி தவிர்க்கமுடியாதது.

65ஆயிரம்பேர்பலி
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் பலதரப் பட்ட அறிக்கைகள் வெளியாகியுள்ளன.அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொகைகளைக் காட்டுகின்றன. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களாலோ, ஐ.நா. சபையாலோ ஏன் இலங்கை அரசால்கூட இந்த தொகையை சரியாகக்கூறிவிடமுடியாது.காரணம் இறுதிபோர் நடந்த பிரதேசத்தில் இருந்த மக்கள் தொகை சரிவரக் கணக்கிடப்படாமையே.

விடுதலைப்புலிகள் தமது தேவைகளுக்காக சனத்தொகையை அதிகரித்து காட்டினர். இதனை மறுப்பதற்கு இலங்கை அரசிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. காரணம் வடபகுதியில் பலவருடங்களாக சனத்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இறந்தவர்கள் என்று ஒரு தொகைபோக காணாமற்போனவர்கள் என்று மற்றுமொரு தொகையினர் குறித்து இன்றுவரை தகவலில்லை.

இந்த நிலையில் இந்தியமத்திய அமைச்சர் முதன்முறையாக தன்சார்புக் கணக்கெடுப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் பொதுமக்கள் விடுதலைப்புலிகள்,இராணுவத்தினர் என 65 ஆயிரம் பேர் இறுதிப்போரில் கொல்லப்பட்டி ருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.


பழையதையே கிழறுதல்
இலங்கையில் வாழும் தமிழர்களின் நல் வாழ்வுக்காக முதலாவதாக ஒப்பந்தம் செய்து கொண்டவர் ராஜீவ்காந்தி. அந்த உடன் பாட்டை முறிக்க யார்காரணம்? அதன் விளை வால்தான் உள்நாட்டிலே போர் ஏற்பட்டது. பலர் இறந்தனர். அந்த வரலாறு மனவருத்தம் தரும் வரலாறு. அந்த ஒப்பந்தம் நிறைவேறி யிருந்தால், அங்கு தமிழரின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும். உறவு பலப்பட்டிருக்கும். அந்த 15 ஆண்டு காலசோகம் நடந்திருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்துபோன நினைவுகளைப் புதுப்பிக்க ஈழத்தமிழர்கள் ஒன்றும் பகடைக்காய்கள் அல்லர் என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். சிதம்பரம் சொல்லும் கதை வீட் டைப் பூட்டிக்கொண்டு ஒருவன் தற்கொலைக்கு முயற்சித்தால் வீடு பூட்டியிருக்கிறது என்பதற் காக அவனைக் காப்பாற்றாது விடுவது போன்றது.

தற்கொலைக்கு முயற்சிப்பவன் கதவை பூட்டத்தான் நினைப்பான். ஒரு உயிரைக் காப் பாற்றுவதற்காக அந்தக் கதவை உடைப்பது குற்றம் என்று சொல்ல முடியாதல்லவா?
இறுதிப்போர் மூண்டு ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிகையில் கைகட்டிக்கொண்டிருந்த இந்திய மத்தியஅரசு இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பது எந்த விதத் திலும் நியாயமாகாது.

சேறுபூசுதல்
புனில் என்று ஒரு பறவை இனம் இருக்கிறது. ஏழு சகோதரிகள் என்று இவற்றைச் சொல்ல லாம். இவை கால்விலங்கிடப்பட்ட பறவை கள். அப்படி என்றால் நடக்கத் தெரியாதவை என்று கொள்ளலாம்.புனில் பறவைக்கு இந்த நிலை ஏற்படக் காரணமாக ஒரு மரபுக்கதை சொல்லப்படுகிறது. அணில் புனில் ஆகியவற் றுக்கு சிவபெருமான் ஒரு பணியை வழங்கு கிறார். இருவரும் சேர்ந்து கிணறு வெட்ட வேண்டும்.எந்நேரமும் துருதுருவென இருக்கும் அணில் புனிலுடன் சேர்ந்து பணியாற்ற வில்லை.பாவம் புனில் ஒருவாறாகத் தன்னத் தனியாகக் கிணற்றை வெட்டி முடிக்கிறது. சந்தர்ப்பம் பார்த்து வந்த அணில்ப்பிள்ளை கிணற்றுச் சேற்றை எடுத்து தன் உடல்முழுவதும் பூசிக்கொண்டது. இறுதியில் பணிப்பாளரிடம் (சிவபெருமானிடம்)இருவரும் செல்கின்றனர். அப்போது அணில் முந்திக்கொண்டு நான் தான் பாடுபட்டு கிணறு வெட்டினேன் என்றது. சிவபெருமானும் நம்பிக்கொண்டு அணிலுக்கு முதுகில் மூன்று தங்கக்குறி பதித்துவிட்டு புனிலுக்கு தண்டனையாக கால் விலங்கிட்டு விடுகிறார். இதுதான் கதை.

சேறுபூசி பொற்குறிவாங்கவே இந்தியாவும் முயற்சிக்கிறது. அமைச்சர் சிதம்பரம் தனது உரையில் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார் இந்தியா வெளியில் இருந்து முயற்சித்தது. பாடுபட்டது. அதனால்தான் இலங்கைப் பிரச்சினை சர்வதேச மயப்பட்டது என்று.

இலங்கைப் போரை நிறுத்துவதற்கு தாம் வேறு நாடு ஒன்றை வைத்துப் பேச்சு நடத்தியதாகவும், தமிழர் பிரச்சினைகளை தாம் வெளிக்கொணர்ந்த தால்தான் இன்று ஐ.நா சபையும் பிரிட்டனும் கூட பேசுவதற்கு முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
யார் குற்றியாவது அரிசியாக வேண்டும். யார் நெருப்புக்காய்ந்தாவது பொங்கல் ஆக வேண்டும். புது வேட்டிகட்டி அகப்பை பிடித்து பொங்கல் பகிர்ந்து தாம் பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப் பாடு என்பதை சிதம்பரஞானி சொல்லி யிருக்கிறார்.

நன்றி சுடர் ஒளி (04-10.12.2013)

Post Comment

கருத்துகள் இல்லை: