புதன், டிசம்பர் 04, 2013

காற்றோடு பறந்த கதைகள்


இந்த வருடத்தின் கார்த்திகை இறுதிநாள்கள் சற்று அமைதியாகவும் அற்புத மாகவும் கடந்திருக்கின்றன.வடபகுதியில் ஏதோ செய்யப்போகிறார்கள் அடக்கி ஒடுக்கவேண்டும் என்று  விசேடமாகப் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளும் வீணாகிப்போயுள்ளன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓரிரு சம்பவங்களைத்தவிர மேலதிக பிரச்சினைகள் எவையும் உற்பத்தியாகவில்லை. ஆனால் உணர்வு பூர்வமாக மாவீரர் நாள் நினைவேந் தல்கள் நடந்துள்ளமை வெளிப்படையாகியுள்ளது. கடந்த வருடத்திலும் பார்க்க இம் முறை மிகவும் உணர்வுபூர்வமாகவே மக்கள் தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இராணுவக்குவிப்பு, பொலிஸ் பாதுகாப்பு என்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கையில் இராணுவக் காவலரணில்கூட  தீபம் ஒளிவிட்டுபிரகாசித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் துயிலு மில்லங்களுக்கு அருகில், அழிக்கப்பட்ட கல்லறை எச்சங்களை எடுத்து சேர்த்த மக்கள் அவற்றுக்கும் வணக்கம் செலுத்தியிருக்கின்றனர்.

வீடுகள் தோறும் தம்பிள்ளைகளுக் காக அஞ்சலிக்காத எவரும் இருந்தி ருக்க வாய்ப்பில்லை. வலைத்தளங் கள் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளைத் தாங்கி மலர்ந்திருந்தன.பேஸ்புக்கில் தீபங்கள் இப்போதும் ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

அடக்குதல் சாத்தியமற்றது
அராஜகரீதியிலான அடக்குதல் சாத்தி யமற்றது என்பதை அரசு புரிந்து கொள்ளத் தயாரில்லை.புலிகள் - பயங்கரவாதம் என்ற சொற்களை மறந்து விட்டு பீதியற்ற இலங்கை குறித்து சிந்திக்க அரசு இன்னமும் துணியவில்லை. புலிகள் குறித்தும் அவர்களது தாக்குதல் உத்திகள் குறித்தும் இன்னமும் அது கண் விழித்து கனவுகண்டபடியே இருக்கிறது. இதன்காரணமாகவே தமிழ் மக்களது பொது நிகழ்வுகளுக்கு தடை போட்டு அவர்களது பாரம்பரியங்களை தடைசெய்ய முயற்சிக்கிறது. இறந்தோர் மற்றும் நடுகல் வழிபாடுகளுக்கு கூட  அரசு தடைவிதித் துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இது பச்சைக் குழந்தையை காரணம் தெரியாமல் தாக்குவது போன்றது. அதாவது ஒரு குழந்தை ஏதும் அறியாப்பருவத்தில் ஒரு கெட்டவார்த்தையை தவறுதலாக உச்சரித்தால் அதை நிறுத்துமாறுகூறி நாம் தண்டிப்பதில் பயன் இருக்காது. அப்படி தண்டித்தால்  தான் கூறுவதில் ஏதோ விடயம் இருக்கிறது என்று அந்த குழந்தை தொடர்ந்து கூற முற்படும்.  அடக்கமுறையும் அப்படிப்பட்டதே.

அடக்குமுறை  பின்னாளில் உடைப்புகளைத் தோற்றுவிக்கவல்லது. விடுத லைப்போராட்டம் வளர்வதற்கு அடக்குமுறையே காரணமாக இருந்தது என்பதை இன்றைய ஆட்சியாளர்களும் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை.

போரால்பேரழிவு ஏற்பட்டது என்றால் அதற்கு முழுப்பொறுப்பாளிகளும் சிங்களத் தலைவர்களே.அதே தவறு களையே மீண்டும் ஏற்படுத்த தென் னிலங்கை சக்திகள் விரும்புகின்றன.

உரிமைகளைக் கேட்பது தவறல்ல
ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் மக்கள் தமது உரிமைகளைக் கேட்பது தவறாகாது. வாழிடம்,பண்பாடு, கலாசார விழுமியங்களை பாதுகாப்பதற்கு ஒரு இனத்துவ சமூகத்துக்கு உரிமை இருக்கிறது.இது ஜனநாயக நாடொன்றில் இருக்கும் உரிமை. அப்படியான சகல உரிமைகளையும் வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் கேட்பது நியாயமானதே.

இலங்கை அரசு தன்னை ஜனநாயக அரசாகக் காட்டும் வரை இத்தனை உணர்வுகளையும் மதித்தாகவேண் டும். இது சர்வதேச நியதி.ஆனால் இலங்கை நடைமுறையில் ஜனநாய கப்பண்புகளைக் கொண்டிருக் கிறதா? அது தனது நாட்டுமக்களுக்கு எவ்வளவு சுதந்திரம் வழங்கியிருக் கிறது ?  என்ற நிலையில் இறுக்கமான-வியத்தகு விடைகள் வெளிப்படலாம்.
ஆகையால் தமிழ்மக்கள் கோரும் உரிமைகளுக்கும் பதில்கள் இன்ன மும் மர்மாமாகவே தொடர்கின்றன. 

பரப்புரை மேடைகள்
வடமாகாணத் தேர்தல் அறிவிக்கப் பட்ட காலத்தில்  பரப்புரைமேடைகள் போர்க் களமாகின.அரசதரப்பு கட்சிகளும் எதிர்தரப்பு கட்சிகளும் வறட்சிக்கால இடிமின்னல்களாக மின்னி  முழங்கின.

எல்லாக்கருத்துக்ககளையும் சலவை செய்து பார்த்தால் எவற்றிலும் அழுக்கில்லை.அப்படியே தூய்மையாக மறைந்துவிட்டன.கிளிநொச்சி மாவட்டத்தில் அரசதரப்பு வேட்பாளர் ஒருவர் "" நான் மாவீரர் துயிலுமில் லத்தை மீள நிறுவ அனுமதிபெறு வேன்''என்று சூளுரைத்தார்.பாவம் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்கமுன்வரவில்லை.ஏனோ தெரியவில்லை. (ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தால் சில வேளைகளில் கடந்த 27ஆம் திகதி நாம் எல்லோரும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் சென்று மாவீரர் களை வணங்கியிருக்கலா மல்லவா?)

பொய்கூறி பிச்சைஎடுத்தல்
பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களின் வாக்குக்களை பிச்சைஎடுப்பது தவறானது என்பதை அரசியலுக்கு வரவிரும்புபவர்களும் வந்து வாலறுந்து நிற்பவர்களும் புரிந்தாக வேண்டும். அதுபோக நம்பிக்கை வார்த்தைகளை விதைத்து மக்களை ஏமாற்றுவது மிகமோசமானது.

வடமாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட அனைவரும் பரப்புரை மேடைகளில் முழங்கியதற்கு மாறுபாடாகவே செயற்பட்டுவருக்கின்றனர். அதற்கான காரணங்கள் மாகாண சபைக்குள்ள அதிகாரங்களை விளங்கிக்கொள்பவர்களுக்கு புரியும். வெளியில் கூட்டமைப்பு குறித்த விமர்சனங்கள் பலவாறாக இருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை வேறுபாடே இதற்கு காரணமாக உள்ளது. அதை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.இன்றைய தேவை கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென்றே   தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு முடிவை எடுத்து அறிவிப்பதற்கிடையில் வரும் மறுதலைக் கருத்துக்கள் அந்த முடிவையே கேள்விக் குறியாக்கிவிடுகின்றன. இதுதான் கூட்டமைப்புக்கு சாபக்கேடாக இருக்கிறது. நாடாளுமன்றில் ஒரு உறுப்பினர் உரை நிகழ்த்த அதை இன்னொருவர் கொச்சைப்படுத்து வது அநாகரிகமானதே.

மக்கள் கொண்டாடுவர்
எந்த எதிர்ப்பையும் சந்தித்து தமது உரிமைக்காகப் போராடவும்,தமது விழுமியங்களைக் கொண்டாடவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்கள் தயாராக இருக்கின்றனர் என்பதை தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவவேண்டியது தமிழ் தலைவர்களது பொறுப்பாகும்.

தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் போராட்டங்களில் அச்சுறுத்தல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஆர்வத்தடன் கலந்துகொள்கின் றனர்.ஆனால் ஓரிரு அரசியல் தலைவர்களைத்தவிர பலரின் முகங்களை இதன்போது காணவே முடிவதில்லை. இந்த நிலைமையும் மாற்றப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மாளிகைச் சந்திப்புக்களை மட்டும் நடத்தாது மக்களோடு சேர்ந்து களத்திலும் குரல் கொடுக்கவேண்டும்.

இனிவரும் நாள்களும் போராட்ட நாள்களே.வடக்கு  மாகாண சபை இன்னமும் மக்கள் மயப்பட வில்லை. அது அரசியல் மேலாதிக்கத்துடனேயே தொழிற்படுகிறது. சபை உறுப்பினர்களுக்காக அதிகாரங்கள் எவை என்றே தெரியவில்லையாம். விரைந்து பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். இதன் மூலமே மக்கள்மயப்பட்ட நிர்வாகத்தை இயக்கமுடியும். அதை விட இனிவரும் காலங்களில் மக்கள் பிரச்சினைக்காக நியாயமான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது.

''விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு மாவீரன். இதில் எந்த ஐயப்படுகளும் இல்லை''  என்றால் அந்த விடுதலை வீரனின் படத்தை வடமாகாண சபையில் தொங்கவிடுங்கள்.அப்போதாவது அங்கு வீரம் பிறக்கட்டும்.

நன்றி சூரியகாந்தி 01.12.2013

Post Comment

கருத்துகள் இல்லை: