புதன், பிப்ரவரி 05, 2014

நீரோடும் வாய்க்கால் வழிபோகும் வாதம்


அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் இனந்தெரியாத முரண்பாடு ஒன்றில் தண்ணீர் சம்பந்தப்பட்டிருக்கிறது.  இரண்டு மாவட்டங்களுக்கிடையில் அதனைப் பகிர்வதில்  அந்த முரண்பாடு தோன்றியிருக்கிறது.

வடக்கு,  கிழக்கில் போருக்குப் பின்னரான நிலைமை, அரசியல் மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான தன்மை  போன்ற காரணிகள் தமிழ் மக்களி டையே  முரண்பாடுகளைத் தோற்று விக்கும் மாயையை ஏற்படுத்தியிருக்கி றது.

தமிழ் மக்களது ஒற்றுமையை குலைத்து அதன் ஊடாக அவர்களது அரசியலை இல்லாமல் செய்வதற்கு ஒரு தரப்பு முயற்சித்து வருகின்றது.  அந்தத் தரப்பு காலம் காலமாக இந்தச் சதி வேலையை தமிழ் மக்கள் மீது  ஏவி விட்டிருந்தது. தமிழ் மக்களைக் குறி வைத்துத்  தாமாகவே ஏற்படுத்தும் நெருக்கடிகளை விட அவர்களுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்துவதன் ஊடாகச் சில காரி யங்களைச் சாதித்து விடுவதற்கு  அந்தத் தரப்பு அன்றும் இன்றும் என்றும் தம்மாலான முயற்சிகளை எடுத்தே வருகின்றது.  இதுவே தென்னிலங்கை சிங்கள அரசின் முக்கிய செயற்பாடாகவும் இருக்கின்றது. 

துணைபோகலாமா?
இலங்கை அரசு எண்ணுவதற்கும் தமிழ் மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் தமிழ் மக்களாகிய நாமே துணை போவது "யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவது'' போலாகிவிடும். 

போருக்குப பின்னர் வடக்கு கிழக்கில் பெரும் அபிவிருத்தித் வேலைத் திட்டங் கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தென்னிலங்கை மாவட்டங்களைப் போன்றே தமிழ் மாவட்டங்களும் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் அரசு அடிக்கடி சொல்லிக் கொள்கிறது.  ஆனால் அபிவிருத்தி நிலையில் இதனை ஏற்றுக் கொள்வது சாத்தியமற்றது. நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாத வீதி களை புனரமைத்து இடிந்து போன கட்டடங்களை மீளமைப்பதில் அபிவிருத்தி என்ற பதம் நிறைவுக்கு வந்து விடாது.

அபிவிருத்தி என்பது மக்களை அடிப்படையாகக் கொண்டது. அது அவர்களது ஒருவேளை உணவில் இருந்து தொடங்குகின்றது.  அபிவிருத்தியாளர்கள் அபிவிருத்தி பற்றி  குறிப்பிடும் அணுகுமுறையில் இது கீழிருந்து மேல் நோக்கியதாகச் செல்வதை குறிக்கின்றது.  ஆனால் வடக்கில் அபிவிருத்தி அதிகாரத்திடம் இருந்து  சிதறப்படுகிறது. சில சட்டதிட்டங்களுக்கும் நடைமுறை களுக்கும் உட்படுத்தப்பட்டு அவை  மக்கள் இடத்தில்  சேராது நின்று விடு கின்றன. இதனை  அபிவிருத்தி என்று ஏற்றுக் கொள்ள முடியாது.  
இப்படியான பாரபட்சமான கட்டமைப்புக்குள்ளேயே நாம் வாழ்ந்து கொண் டிருக்கின்றோம். இதனை நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும். இதை தெளிவுபடுத்துவதற்கு  வேறு எவரையும் எதிர்பார்க்க முடியாது. 

அண்மையில்  ஊடகங்களில் வெளியான தகவலின்படி இரண்டு மாவட் டங்களுக்கிடையில் புதிதாக ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பங்கீட்டு பிரச்சினை தொடர்பான உச்சக்கட்ட பேரமாக "இரணைமடு தண்ணீரை  யாழ்ப் பாணத்துக்கு கொண்டு வர கிளிநொச்சி மக்கள் மறுத்தால் நாம் அங்கு சென்று பணியாற்ற மாட்டோம்' என்ற தனிப் பட்ட கருத்து அமைகின்றது. தண்ணீர் பங்கீட்டுக்கு அப்பால் இரண்டு மாவட்டங்களது உறவு நிலையை குழப்புவ தற்கு சிலர் எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு இது ஏதுவாக இருந்தாலும் எந்த அடிப்படையும் அற்ற கருத்தாகவே இதுவும் அமைகின்றது.  

சிறுபிள்ளைத் தனம்
வன்னிப்பகுதிக்கு அரச அதிகாரிகள் சேவையாற்றச் சென்று அங்கு எதிர் கொள்ளும் பிரச்சினை தொடர்பில்  ஒரு படைப்பாளி  படைத்த கவிதையை வன்னியில் சிலர் பிரச்சினையாக்க முற்பட்டார்கள்.  சுயலாப அரசியலுக்காக இதனைச் செய்தவர்கள்கூட மக்களின் உறவு நிலையில் விரிசலை ஏற்படுத்து வது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனாலும் அது ஒரு அனுபவ கவிதை. அதை வைத்து உறவு நிலைகள் குறித்து ஆராய்வது மிகத் தவறு என்பது அனை வருக்கும் தெரிந்ததே.

அதேவேளையில் தண்ணீர் தர மாட்டோம் என்று அவர்கள் சொன்னதற்காக "அரச ஊழியர்கள் வன்னிக்குச் சென்று சேவை செய்ய மாட்டோம்'' எனக் கருதுவது  அல்லது அறிவிப்பது  எந்த வகையிலும் பொருத்தமற்றது. அதற்கு அவர்களுக்கு உரிமைகூடக் கிடையாது. ஏனென்றால் அரச பதவியில் இவர்கள் அமர்த்தப்படும்போதே நாட்டின் எப்பாகத்திலும் கடமையாற்ற தயார் என்று அவர்கள் ஏற்றுக்கொள் கிறார்கள். மாற்றல் வழங்கப்பட்டால் அவர்கள் அதனை ஏற்றுத்தானாக வேண்டும். இல்லையேல் வேலையை விட்டுவிடலாம். அதைவிடுத்து நாங்கள் போகமாட்டோம் என்று கூறும் "அறிவு டையவர்கள்'' அங்கு போவதைவிட போகாமல் விடுவதே மேல்.

இப்படிச் சொல்பவர்களின் சேவை எப்படிப்பட்டதாக இருக்கும்? மக்களது தேவைகளை, பிரச்சினைகளை மறைத்து கூறுவதில் இவர்கள் பணி நிறைந்து நிற்கிறது. 

பிரச்சினை தீர்ந்து விட்டதா ?
வன்னியில் இன்னமும் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை  எதிர்நோக் கியே வருகின்றனர். இருப்பதற்கு வீடில்லை. உடற் தகுதிக்கு ஏற்ப உழைப்பு இல்லை. உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வில்லை இப்படி அவர்களது பிரச்சினை நீண்டு கொண்டே செல்கின்றது. 

சேவை செய்கின்றோம் எனக் குறிப்பிடுபவர்கள், தமது சம்பளத்தை அந்த மக்களிடம் கொடுத்து விட்டு வரவில்லை. அவர்கள் ஒரு நாளைக் கழிப்பதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது உண்மையானாலும் அங்கு வாழ்பவர்கள் அதைவிடப் பல மடங்கு துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. 

விவசாயத்தை நம்பிய அனேகமான குடும்பங்கள் இன்று பெரும் இன்னல்க ளுக்கு ஆளாகி உள்ளன. காரணம் கடந்த மூன்று வருடங்களாக பருவ கால நிலையில் ஏற்பட்ட மாற்றம் இவர்களது தொழில் வாய்ப்பை சீர்குலைத்து இருக்கிறது. இப்படியான நெருக்கடி நிறைந்த சூழலிலேயே அந்த மக்களின் பெரும்பாலானோர் வாழ்கின்றனர்.  அவர்கள் மத்தியில் பணியாற்றுவதை முழுக் காரணமாக வைத்து அந்த மக்களது வாழ்வாதார தண்ணீரை பறித்து எடுத்திட முடியாது.  

அதற்கான சுமுக வழிமுறைகள் எத்த னையோ இருக்க சிறுபிள்ளைத்தன மாக நடந்து கொள்வது  நற்காரியமாக அமைந்து விடாது. 

வலிந்த அழைப்பு
இரணைமடு குடி தண்ணீர் பிரச்சினை அந்தத் திட்டத்துக்குள் தேசிய அரசை வலிந்து இழுப்பதாகவே இப்படி ஆளுக் காள் கருத்துச் சொல்லி முட்டிமோதிக் கொள்வது அமையும். சுமுகமாக, மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க  வகையில் இரண்டு மாவட்டங் களை சேர்ந்தவரும் பேசி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். இல்லையய னில் இதனைக் காரணம் காட்டி இந்தத் திட் டத்தை அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும் இதனால் பாதிக்கப்படுவது இரண்டு மாவட்டங்கள் மட்டுமல்ல. வட பகுதி மட்டுமல்ல. தமிழ் மக்களது பாரம்பரி யம், கலாசாரம், பண்பாடு, இருப்பு எல்லாமே.

இதற்கு இரண்டு மாவட்டங்களும் துணைபோகக் கூடாது. கிளிநொச்சி மாவட்ட விவசாயத்தைப் பொறுத்த வரை அவர்களது கோரிக்கைகளும் கேள்விகளும் நியாயபூர்வமானவை. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், யாழ்ப்பாணத்துக்குத் தண் ணீர் கொடுக்க முடியாது என்று மனிதா பிமானத்தைக் கொன்று புதைக்கும் வசனங்களைப் பயன்படுத்துவதை சம்பந்தப்பட்டவர்களும் தவிர்க்க வேண்டும். ஒரு பக்கத்து நியாயங்களைச் சொல்வதற்கு அடுத்தவனை இழுப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அதற்காக தவித்த வாய்க்கு தண்ணீரே கொடுக்காதவர்களுக்காக நாங்கள் ஏன் இதை, அதைச் செய்ய வேண்டும் என்ற தார்மீகக் கோபத்தில் எதையாவது உளறிக் கொட்டுவதை அப்படிச் செய்பவர்களும் தவிர்க்க வேண்டும். 

மக்கள் பங்களிப்பு அற்ற எந்தத் திட்டமும் நடைமுறைக்கு வந்ததும் இல்லை. வரவும் முடியாது. அவ்வாறு திட்டங்கள் வலிந்து திணிக்கப்பட்டால் அவை முழுமைப்படுத்தப்பட்டு  திட்டத்தின் பயன்களாகக் குறிப்பிடப்பட்ட இலக்கு கள் எட்டப்படுவதுமில்லை. 

மக்களுக்காக செய்யப்படும் அபிவிருத்தி என்ற வகையில் இது இரண்டு மாவட் டங்களிலும் மக்களையே அடிப்படையாகக் கொண்டது என்பதை கருத்தில் கொண்டு அவர்களது விருப்பு வெறுப்புக்களுக்கு  அப்பால் பொதுநிலைப்படுத் தப்பட முடிவு ஒன்றை காண்பது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கடமை.

குடி தண்ணீர் தட்டுப்பாடு
யாழ்ப்பாணத்தில் அடுத்த பத்தாண் டுகளில் குடி தண்ணீர் தட்டுப்பாடு  ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும் என எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. இது புதிய கண்டுபிடிப்பு இல்லை. யாழ். மாவட் டத்துகு உள்ளேயே எத்தனையே மீள் புதுப்பித்தல் திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவை பற்றி முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அவற்றை மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் அடுத்த பத்தாண்டு களில் நகர்மயமாக்கல், குடி அடர்த்தி அதிகரிக்கவே செய்யும் அந்த நிலைமைகளையே கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண் டும். நாம் எமது பிரதேசத்தை அபிவி ருத்தி செய்வதற்கு இருக்கக்கூடிய ஏதுக் களை அடையாளப்படுத்த வேண்டும். 
வெறுமனே இருக்கும் அதிகாரங்களை சேவை நிலைகளையும் பயன்படுத்தி ஒரு சமூகத்தை மிரட்டி இன்னொரு சமூ கம் வளர்ச்சியடைந்து விட முடியாது. பரஸ்பர நம்பிக்கையை கட்டியயழுப்பி வடக்கின் அபிவிருத்திக்கு கைகொடுப் போம்.



Post Comment

கருத்துகள் இல்லை: