செவ்வாய், மார்ச் 04, 2014

மனித படுகொலையும் 12 ஆயிரம் தோட்டாக்களும்

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது. சிறுபான்மை இனமான உள்ள தமிழர்களை இலங்கை அரசு அடக்கி ஒடுக்கி வருவது மட்டுமன்றி அவர்கள் மீது மனித குலத்திற்குவன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது.
சிறுபான்மை இனமான உள்ள தமிழர்களை இலங்கை அரசு அடக்கி ஒடுக்கி வருவது மட்டுமன்றி  அவர்கள் மீது மனித குலத்திற்கு எதிரான உரிமை மீறல்களையும் மேற்கொண்டது என்பதே இதற்கான காரணம்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நீண்ட காலமாக நடத்தப்படும் அடக்கு முறையுடன் கூடிய ஆட்சி, அவர்களைச் சொந்த இடங்களில் நிம்மதியாக வாழ விடமாமல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி நிலைகுலையச் செய்துள்ளது.

70களில் இருந்து தமிழர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து சென்றமைக்கான வரலாறுகளே உள்ளன. காலப் போக்கில் அதன் செயற்பாடுகளும் பாதிப்பு திறனும் அதிகரித்தன.

விடுதலைப் புலிகளின் எழுச்சிக்குப் பின்னர் வடக்கு - கிழக்கு பகுதிகளில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே மக்கள் ஒரளவுக்கேனும் சுதந்திரமாகவே வாழ முடிந்தது. எனினும் அந்த நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. புலிகளின் எழுச்சி அபரிமிதமாக அதிகரிக்க இலங்கை அரசு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.

குறிப்பாகப் புலிகளின் மரபியல் ரீதியான போரியல் திறன் சிங்கள தேசத்தை திணறடித்தது. இலங்கை அரசுக்கு மட்டுமன்றி இந்தியா அமெரிக்க போன்ற நாடுகளையும், திரும்பி பார்க்கும் அளவுக்கு  விடுதலைப்புலிகள் தமது போரிடும் தந்திரங்களை வளர்த்துக் கொண்டனர்.

இதனை கருத்தில் கொண்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் மீதான தடையை அறிவித்து உலக நாடுகளிலும் அதனை நடைமுறைப்படுத்த வழி செய்தது. அல்குவைதா செப்டெம்பர் 11இல் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்திய தாக்குதலின் பின்னரான சர்வதேச நிலைமைகள் இலங்கை அரசுக்குச் சாதமாக இருந்ததன் காரணத்தால் தான் நினைத்தவற்றை அதனால் அரங்கேற்ற முடிந்தது.

விடுதலைப் புலிகள் சர்வதேச அளவில் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டமைத்து வருகின்றனர் என உலக நாடுகளுக்கு பரப்புரை செய்த இலங்கை அரசு அதில் வெற்றி கண்டது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என இலங்கை அரசு விடுதலைப் புலிகளிற்கு எதிராக இறுதிக் கட்டப் போரை தொடுக்க உலக நாடுகளின் உதவியை நாடியது. அவையும் அரசின் பரப்புரையை ஏற்று அதற்கு உதவி செய்ய ஆரம்பித்தன.

சர்வதேச நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு வடக்கு - கிழக்கு பகுதிகளில் கண்மூடித்தனமான போரை ஆரம்பித்தது. மனித குல உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் காட்டுமிராண்டித்தனமாகப் போரை நடத்தி அதில் வெற்றியையும் பெற்றது.

அந்தப் போருக்கு எல்லா நாடுகளும் உதவிகளை வழங்கின. புலிகளை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதில் அப்போது எல்லா நாடுகளும் ஒற்றுமையாக ஒரே கருத்தியலைக் கொண்டிருந்தன. இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை அரசு, புலிகளை ஒடுக்குகின்றோம் என்ற பெயரால் அப்பாவித் தமிழ் மக்கள் மீது ஈவுஇரக்கமற்ற ஒரு முழுப் போரை நடத்தி பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தது. இந்தப் போரில் 40 ஆயிரத்துக்கும் 70 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட தமிழர்கள் உயிரிழந்தார்கள் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. .

விடுதலைப்புலிகள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவே போராடினர். மிகச் சிறிய சமூகம் ஒன்று மிகப் பெரிய சமூகம் ஒன்றை எதிர்த்து, வெளியிலிருந்து எந்த நாட்டின் உதவியும் கிடைககாமல் போராடும்போது அது தனது முழு மூர்க்கத்தனத்தையும் மோசமான போராட்டப் பொறிமுறைகளையும் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. அதனையே விடுதலைப் புலிகளும் செய்தனர். ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் முறைகள் இல்லை என்று பலம்வாய்ந்த நாடுகள் அறிவித்தன.

இன்று அதே நாடுகள்தான் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போர் முறைகளும் போரில் அரசு நடந்துகொண்ட முறைகளும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கன அல்ல என்று கூறுகின்றன. இதுவே தமிழர்களின் பிரச்சினைகள் சர்வதேச மட்டத்தில் இன்று பேசு பொருளாக்கப்படுவதற்கான காரணமாக அமைந்திருக்கின்றது.

தமிழ் மக்களுக்கு எதிராக அரசு புரிந்த வன்கொடுமைகள் இன்று சர்வதேச அளவுக்கு பேசப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு நீதி வேண்டுமென உலக நாடுகள் குரல் கொடுக்கின்றன.


இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை கேட்டுக் கேள்வி இன்றி சுட்டுக்கொல்லும் காணொலி ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. தவிர  போர் உத்திகளுக்கு முரணான சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட குண்டு பாவனைகள் குறித்தும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இ
லக்கு வைத்து பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன என்பதற்கான சந்தேகங்களும் அதை உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. 

இவ்வாறான குற்றஞ்சாட்டுக்களை இலங்கை அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. குற்றவாளிகள் உடனடியாக, முதல் கேள்விகளிலேயே குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை. என்பது இலங்கை அரசின் அறிவிப்பின் மூலம் நிரூபிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம்  கேள்விக்கு மேலதிகமாக தண்டனைகள் வழங்குவதன் மூலமே உண்மைகளை கண்டறிய முடியும்.

அண்மையில்  மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமர வீர ஒரு கருத்தை முன் வைத்தார். அதாவது இலங்கையில் போருக்குப் பின்னரான  முன்னேற்றம் குறித்தும் பயங்கரவாதத்தை அழித்து ஜனநாயகத்தை நிலை நாட்டியமை குறித்தும் சர்வதேச தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை, இலங்கை அரசின் மீது தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்களையே சுமத்தி வருகின்றனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

போரின்போது கைது செய்யபட்ட 12 ஆயிரம் புலிகளை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்திருக்கிறோம். நாங்கள் குற்றம் இழைத்தவர்கள் என்றால் இவர்களுக்கு எதற்காகப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும்? கோடி ரூபாகளை செலவழிக்க வேண்டும்? தொழில் பயிற்சிகளை வழங்க வேண்டும்?  இவற்றுக்குப் பதிலாக 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே எமக்குச் செலவாகி இருக்கும், இதிலிருந்தே அரசு எந்த போர்க் குற்றத்தையும் செய்யவில்லை என்பது தெரிகிறது என்ற சாரப்பட அமைச்சரின் உரை அமைந்திருந்தது.

இராணுவத்தினரின் சீருடை தரித்த ஆயுததாரிகள், கைதான தமிழர்களைப் பின்புறமாகக் கட்டி நிர்வாணமாக்கி வெட்ட வெளியில் துப்பாக்கிகளால் சுடும் காட்சிகள் "சனல் 4' தொலைக்காட்சி மூலம் வெளிவந்த நிலையில் அமைச்சரின் கருத்து, தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் எண்ணம் மிகச் சிறிய விடயம் என்ற சிந்தனை அரசின் உயர்மட்டத்தில் இருந்திருக்கிறது என்பதையே பிரதிபலிக்கிறது.

12 ஆயிரம் பேரைச் சுட்டுக் கொல்வதற்கு 12ஆயிரம் தோட்டாக்கள் போதும் என்ற கருத்து அவர்களைப் பிடித்து நிறுத்தி வைத்துச் சுடுவதற்கு மட்டுமேயானது என்பது கண்கூடு. ஆக, பிடித்தவர்களைச் சுட்டுக்கொல்வது மிகச் சாதாரணமானது என்கிற எண்ணம் இப்போதும் அவர்களுக்கு இருக்கிறது என்பதன் வெளிப்பாடே அமைச்சரின் கூற்று.

இவரது கருத்துப்படி பார்த்தால், படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணால்போனவர்களுக்கும் இந்தக் கதிதான் நேர்ந்திருக்குமோ என்று தமிழர்கள் அச்சப்பட வேண்டியிருக்கிறது. அமைச்சரின் கருத்து இத்தகைய பயத்தையும் பீதியையுமே ஏற்படுத்துகிறது.

உண்மையில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கே முதலில் புனர்வாழ்வு அளிக்க வேண்டும். தமிழ் மக்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அந்த முகாம்களில் வைத்து அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். வன்னியில் இடம்பெற்ற  போர் கொடூரங்கள் தொடர்பிலான காணொலிகளை காண்பிக்க வேண்டும். அதன் மூலமே அவர்களை மனிதர்களாக மாற்ற முடியும்.

நன்றி சூரியகாந்தி (02.03.2014)

Post Comment

கருத்துகள் இல்லை: