ஞாயிறு, ஜனவரி 26, 2014

மக்களின் கண்ணீரால் மன்னரைத் திருப்தியாக்கல்


வரலாற்றுக் காலங்களில் மன்னர்களின் விருப்பு வெறுப்புக்களே ஆதிக்கம்செலுத்தின. மன்னர்களைத் திருப்திப்படுத்துவதற்கான அமைச் சரவை, தொண்டர்படை என்று எல்லாக் கட்டமைப்புக்களும் இயங்கின. கவிபாடும் புலவனா கினும், கட்டுச் சொல்லும் குறிகாரனாகிலும் மன்ன னின் மறுபக்கம்பற்றிப் பேசிவிடக்கூடாது. அப்படி நடந்துவிட்டால் அவர்கள் பாடு சாவுதான்.

வரலாற்றுக் கதைகளை நினைவுபடுத்துவதால் எமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஜனநாயகவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் அரசுகள் சில இன்னமும் கொடுங்கோல் மன்னர்கள் போல ஆட்சி செய்துவருகின்றன என்பதை மறுக்க முடியாதல்லவா?
இலங்கை ஒரு ஜனநாயகப் பண்புகொண்ட நாடு என்றும், அது சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சிக் கட்டமைப்புக்கள் முன்னேற்றம் கண்டுள்ளன என்றும் வாசித்தறிய முடிகிறது. எழுத்தளவிலும் பேச்சளவிலும்  இலங்கையில் ஜனநாயகம் இருப்பதாக அறியப்பட்டாலும், நடைமுறையில் அது இல்லை என்று கூறலாம்.

அல்லது ஜனநாயக எண்ணக் கருவாதியான ஆபிரகாமின் கருத்து, கால ஓட்டத்தில் மாற்றம் பெற்றுd வலுவிழந்து இலங்கை போன்ற நாடுகளில் மறு பதிப்பிடப்பட்ட சில தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டே பேணப்படுகிறதுd பின்பற் றப்படுகிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

அடிமை ஜனநாயகம்
மன்னர் மஹிந்தவைப் பொறுத்தவரை இலங்கை நவீன ஜனநாயக நாடு. அங்கு மக்களை அதிகாரம் மிக்க தலைவர்கள் கட்டுப்படுத்தி, அடக்கி, ஒடுக்கி ஆளலாம். அதுவே ஜனநாயகம் என்றும் கொள்கிறார் போலும் அவர். அதுமட்டுமல்லாது அவருக்குக் கீழ் இயங்கும் அமைச்சர்களும் வடிகட்டப்பட்ட ஈ, எறும்புகள் போலவே செயற்படுகின்றனர்.

அதனால் மஹிந்தருக்கு எதிர்காலம் பற்றிய பயம் அற்றுபோய்விட்டது. பித்துப்பிடித்தவர்கள் தாம் செய்வதைத் தவிர வேறெதையும் ஏற்பதில்லை. அதுவே அவர்களது வாழ்நாள் கொள்கை யாகிவிடுகிறது. அதுமட்டுமல்ல அதுவே அவர்களது சாவுப் பொறியுமாகிறது. கெடுகுடி சொற்கேளாது. சா பிணம் மருந்து குடியாது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்? எல்லா அர்த்தங்களும் இப்போது நடைமுறையில் பார்க்கும்போதுதானே தெரிகிறது.

காலம் கடத்தும் வேலை
இலங்கையில் இயற்கை நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் முதல், மனித சொயற்பாடுகள் வரை எல்லாவற்றுக்கும் குழு அமைத்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பது நியதியாகிவிட்டது. இறுதிப் போரின் பின்னர் சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாக அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு இந்த வரிசையில் பிரபல்யமானது.

ஒரு நிகழ்வு அல்லது இடர் காரணமாக ஏற்படும் சவால்கள் நெருக்கடிகள் குறித்து ஆராயும் வகையில் அமைக்கப்படும் குழுக்கள் தனிநோக்கம் கருதியவையாகவே செயற்படுகின்றன.அதாவது அரசுக்கு பாதகத்தன்மைகளை ஏற்படுத்தாத வகையில் காரண காரியங்களைக் கண்டுபிடிப்பதே அவற்றின் முக்கிய குறிக்கோளாகக் காணப்படு கிறது இலங்கையில்.

பிறர் நலன் கருதி குழு அமைக்கப்பட்டாலும், அது பொதுப் பரப்பில் பொதுப் பண்புகளுடன் செயற் படுவது போலக் காட்டிக்கொண்டாலும், ஈற்றில் அரசு நல நோக்குடனேயே இத்தகைய ஆணைக் குழுக்கள் முடிவுகளை வெளிப்படுத்துகின்றன.


குறிப்பாக இலங்கை மீது மூட்டப்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளை ஆறவைக்கும் நோக்கிலேயே இந்தக் குழுக்கள் செயற்பட்டுவருகின்றன. செயலுருப்பெற்றுள்ளன. எனவே இவற்றின்  பயன்கள் ஒருபோதும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சேரப்போவதில்லை.

காணாமற்போனோர் குறித்த
ஜனாதிபதி ஆணைக்குழு

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக ளின்படி இறுதிப்போரின்போது காணாமற் போனவர்கள் தொடர் பில் ஆராய ஜனாதி பதியால் நியமிக்கப் பட்ட ஆணைக்குழு அண்மையில் கிளிநொச்சியில் நான்கு நாள்கள் விசார ணைகளை மேற்கொண்டது.

குழுவில் அடங்கியிருந்தவர்களைப் பொறுத்தவரை களத்தில் தங்கள் பணிகளை உண்மையாகவும் நேர்மையாகவும் முன்னெடுப்பதுபோலவே காட்டிக்கொண்டனர். அதில் பாதிக்கப்பட்ட மக்கள்தான் கண்ணீரின் மிகுதியால் தடுமாறியதை அவதானிக்கமுடிந்தது.

எங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடக்கின்ற னவோ அங்கெல்லாம் காணாமற்போன வர்களது படங்களுடன் அலைந்து திரிந்து அலுத்துப்போன உறவுகளுக்கு, கிளிநொச்சி விசாரணையும் கண்துடைப்பு என்று நன்கு தெரியும். ஐ.நா. மனித உரிமைகள்  சபை அமர்வுகள் நெருங்குவதால் அங்கு உரையாற்றுவதற்கு இலங்கை அரசு குறிப் பொடுத்துக் கொள்ளும் விடயங்களே இவை. ஆனாலும் உயிரின் அருமை, இழப்பின் வலி காரணமாக அந்த மக்கள் எங்கு தேடியும் அலையத்தான் வேண்டியுள்ளது.

இட்டுக்கட்டல்
கிளிநொச்சியில் பதிவுகளை மேற்கொண்டபோது ஆணைக்குழுவின் தலைவர் இறுதியில் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அந்தக் கருத்துத்தான் மக்களைச் சிந்திக் கத்தூண்டியது.

அதாவது போர் உக்கிரமடைந்த காலத்தில் விடுதலைப் புலிகள் கட்டாய ஆள்சேர்ப்பு நடைமுறையைப் பயன்படுத்தினர். இதன்போது வன்னியில் இருந்த இளைஞர் யுவதிகள் கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டனர்.இது உலகறிந்த விடயம்.
இவ்வாறு ஆள்சேர்ப்பு செய்யப்பட்டவர்க ளில் பலர் போரின் போது கொல்லப்பட்டனர். பலர் இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர். பலருக்கு என்ன ஆனது என்றே தெரியாது போனது.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தவர்களில் சிலர் எங்கள் பிள்ளை களை விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்ற னர். அதன் பின்னர் அவர்களை நாம் சந்தித்தோம். இறுதிப் போரின் பின்னர் அவர்களது தொடர்பு இல்லை என்று கூறினர். சிலர் தாம் தமது கணவன்மாரை, பிள்ளைகளை இராணு வத்தினரிடம் ஒப்படைத்தோம் என்று கூறினர்.
உறவுகளது கருத்து இரண்டு வகையில் இருக்க ஆணைக் குழுவின் தலைவர் ஒருபக்க கருத்தை மட்டும் தெரிவித்தமை, இராணு வத்தை அடையாளம் காட்டமுடியுமா என்று கோரியமை குழுவின் பொது, பக்கச்சார்பற்ற தன்மைக்கு மாறாக அமைந்துள்ளதைக் காட்டியிருக்கிறது.

கைப்பேசிகள் பார்த்த உண்மை
இறுதிப்போரின் கொடூரங்களை முன்னரங்கில் நின்ற இராணுவத்தினரின் கைத்தொலைபேசிகள் காட்சிப்படுத் தின.அவற்றில் சில ஏதோ ஒரு வகையாக வெளியாகி பெரும் தெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் அரசு விழித்துக்கொண்டதால் அத்தகைய காட்சிகளை வைத்திருக்கும் இராணுவத்தினரை மிரட்டி அவற்றை இல்லாமல் செய்து விட்டது. வெளியாகியவற்றையும் புனைவு என்று கூறி மறுத்துவருகிறது.

விடுதலை புலிகளின்  தலைவர் பிரபாகரன் கொல்லப்படும் காட்சியை யாழ்ப்பாணம் ஊரெழு இராணுவ முகாமுக்குப் பயண அனுமதி பெறச்சென்ற மாணவர்களுக்கு கைப்பேசிகளில் கொடுத்து அனுப்பியது இராணுவத்தினரே. கைப்பேசிகளில் பிடிக்கப்பட்ட அந்தப் படங்கள் மட்டும் உண்மையாக இருக்கும் போது இராணுவத்தினர் புரிந்தவைகளை எடுத்த படங்கள் மட்டும் எப்படிப் பொய்யாகிப் போயின என்பதற்கு விளக்க மில்லை.

ஒருவர் காணாமற்போனால் அவரை அவரது விருப்பத்துக்கு மாறாகக் கடத்தியவர்களே குற்றவாளிகள் என்று ஆணைக் குழுவின் தலைவர் கூறுகின்றார். இதுவரை அளிக்கப்பட்ட சாட்சியங்களில் பதிவு செய்யப்பட்டவற்றைக் கொண்டு பார்த்தால் ஒருவேளை புலிகள்தான் இவர்கள் அனைவரையும் கடத்திச் சென்று கொன்றுவிட்டார்கள் என்று ஆணைக்குழு முடிவுக்கு வந்துவிடக்கூடும் என்ற அச்சம் தானாவே வந்துவிடுகிறது. முடிவு அப்படி இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில் லைத்தான். ஆனால், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர் களுக்கு என்ன நடந்தது என்று ஆணைக்குழு சொல்பவற்றைக் கேட்பதற்காக நாம் பொறுமையுடன்தான் இருக்கவேண்டும்.

அரசைக் காப்பாற்றும் முயற்சிகளாக இல்லாமல் உண்மையைக் கண்டறிந்து பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சியாக இவை மாறவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. மன்னர் காலநடை முறைகளையே இலங்கை அரசு ஜனநாயகமாகப் பார்க்கிறதே என்று நினைக்கும்போது கவலை பொத்துக்கொண்டு வருகிறது.]

நன்றி சூரியகாந்தி(26.01.2014)

Post Comment

கருத்துகள் இல்லை: