ஞாயிறு, ஜனவரி 19, 2014

மார்ச் மாதத்தின் மறைவு

essayநேற்று வரை ஒளிர்ந்து கொண்டிருந்த மின் குமிழ் இன்று இருளை விழுங்கி மெளனமாக காத்திருக்கின்றது. வெளிச்சத்தின் நடுவே தெரியும் துப்பாக்கி உருவமும் கண்களில் படவில்லை. நாய்களின் குரைப்பொலி ஆங்காங்கே கேட்டுக் கொண்டே இருந்தாலும் இரவு
அமைதியைக் குலைக்கும் இந்தக் குரைப்பொலிகள் புதிய செய்திகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அவை தான் இலங்கையில் அமைதியும் சமாதானமும்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் தொடர்பில் நான்கு வருடங்களாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விடயங்களின் மத்தியில் இலங்கை வீரவசனங்களோடு தமது பொய்மைகளைச் சரி என்று வாதிட்டுக்கொண்டிருக்கிறது.  ஆனால் சர்வதேசத்தின் பிடியில் சிக்கித் திணறுகிறது என்பதை இன்றுவரை வெளிக்காட்டவில்லை. ""விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை'' என்ற கதையால் அந்த வீராப்பு அமைந்திருக்கிறது. அவ்வப்போது வரும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு இலங்கை வெளித்தெரியாத இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் படையினர் மேற்கொண்ட மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச மட்டத்தில் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ள நிலையில் அவற்றைச் சமாளிப்பதற்கும் இல்லையயன்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்கும் இலங்கை அரசு எந்தளவுக்குப்பாடுபட முடியுமோ அந்தளவுக்குச் சிரமப்பட்டு நாயாய் அலைகின்றது.

இரு வியூகங்கள்

இலங்கை அரசு இரண்டு வியூகங்களில் தனது இராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதாவது உள்நாட்டில் எழக்கூடிய குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்கும், வெளிநாடுகளின் ஆதரவுகளைத் திரட்டி வெளி அழுத்தங்களை மாற்றி அமைப்பதற்கும் அது முழுப்பணியில் ஈடுபட்டுள்ளது.
உள்நாட்டில் இப்போதும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து  மாயமந்திரங்களை உருவாக்க அது விசேட திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் சமவுரிமை, சமவாய்ப்பு, வழங்கப்பட்டு அவர்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கான  சூழல் ஏற்பட்டிருக்கிறது என்ற கருத்தை வெளிப்படுத்தும் முகமான உள்நாட்டு மாயைகளை உருவாக்குதல் என்ற வகையில் இந்தத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளித்தல், போரால் பாதிக்கப்பட்ட பிர தேசங்களை அபிவிருத்தி செய்தல், போர் நடைபெற்று அழிவுகள் ஏற்பட்ட பகுதிகளை உருமறைப்புச் செய்தல், பாதிக்கப்பட்ட மக்களை தம் வசப்படுத்தி அவர்கள் ஊடாகப் பொய்களை உண்மையாக்குதல் போன்ற வெளி உலகை ஏமாற்றும் நடவடிக்கைகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. இவை எந்தளவிற்கு வெற்றியளித்தன அல்லது அவை தோல்வி அடைந்துவிட்டதா என்பதை வெளி உலகுதான் அறிவிக்க வேண்டி இருக்கும். இவை ஒருபுறம் இருக்க ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபை யின் ஜெனிவா அமர்வு ஆரம்பமாக உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தைத் திருப்திப் படுத்தும் முகமாக சில நடவடிக்கைகளை அரசு விரைவுபடுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

அதாவது வடக்கு கிழக்குப் பகுதியில் தேவையற்ற இராணுவப் பரம்பல் தொடர்வதாக உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல்வாதிகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை மறைக்கும் வகையில் அரசு செயற்பட ஆரம்பித்திருக்கின்றது. வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் காணாமற் போய்க் கொண்டு இருக்கின்றன.

உயர்ந்த தடுப்பு வேலிகள், சுற்றி அடைக்கப்பட்ட காவலரண்கள் ஒரு நாளோடு உடைக்கப்படுவதால் அந்த இடம் நீண்ட காலமாக வெளிப்படுத்தி இருந்த இருளை விழுங்கி ஒளிப் பிரவாகம் எடுத்திருக்கின்றது. 
அச்சுறுத்தும் வகையில் எந்த நேரத்திலும் அங்கு  நின்றுகொண்டிருக்கும் கறுத்த உருவங்கள் அந்த இடத்திலிருந்து அகன்று இருக்கின்றன. ஆனால் இது ஏன் என்ற கேள்வியுடன் இதுவரை இருந்த அச்ச உணர்வு இன்னும் இரட்டித்து இருக்கிறது. 
வெளி உலகுக்கு இராணுவப் பரம்பலை மறைக்கும்  வகையில் அரசு இப்போது மேற் கொள்ளும் முயற்சிகள் மக்களுக்கு பெரும் அச்சத்தையே உண்டு பண்ணியுள்ளன. 
 நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் தனக்கு எதிரானதாக இல்லாமல்  தோற்று இருப்பதற்கான தமது பக்க நியாயங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கையாக படைகுறைப்பு நெருக்கடி நிலைமைகளை ஏற்படுத்துவது நிரந்தரமானது அல்ல. இதற்கு பின்புறமாக ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவர்கள் வடகிழக்கு பகுதியில் இராணுவத்தினரின் நிலைத்திருப்பை உறுதி செய்வார்கள் என்பதில் மக்கள் சந்தேகமற்ற பட்டறிவைக் கொண்டு இருக்கின்றனர்.

குடாநாட்டில் பரவலாக காவலரண்கள் அகற்றப்படும் நிலையில் அங்கு பொதுமக்கள் குழுக்களின்  அடாவடித்தனங்கள்  சமூக விரோத நடவடிக்கைகள் சட்டத்துக்கு புறம்பான செயற்பாடுகள் என்பன அதிகரித்து இருப்பதாக காட்டுவதற்கும் சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கும் காரணம் இருக்கின்றது. அதாவது சமூக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் வட கிழக்கு பகுதியில் இராணுவ பிரசன்னம் தவிர்க்க முடியாதது என்பதை மறைமுகமாக நியாயப்படுத்துவதற்கு இந்த திடீர் காவலரண் அகற்றல் காரணமாக இருக்குமோ என மக்கள் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக  2009 போர் முடிவுக்கு வந்த பின்னர்  கிறீஸ் பூத சர்ச்சையை ஏற்படுத்தி இராணுவத்தினரை மக்களோடு உலவ விட்டதோடு மூலம் புதிய யுக்தி ஒன்றை அரசு கையாண்டு இருந்தது.

இது போன்ற ஆபத்தான, திட்டமிட்ட நடவடிக்கைகளை தம்மீது எவரும் திணித்து விடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. அதாவது மார்ச் மாத சர்வதேச அழுத்தங்கள் முடிவடைந்ததும் மீண்டும் இந்த பகுதியில் காவலரண்கள் முளைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு தமிழர் பகுதிகளில் முடுக்கி விடும். அதனை காரணமாக வைத்து காவலரண்கள் மீண்டும் அமைக்கப்படலாம் என்றே மக்கள் சந்தேகப்படுகின்றனர்.

வட கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரை மக்கள் மத்தியில் இருந்து குறைத்து காட்டுவது அரசின்  திட்டமிட்ட நடவடிக்கையாகவே தென்படுகிறது. மனச் சுத்தியுடன் அரசு வட கிழக்கு பகுதிகளில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையயன மறைமுககாரணங்களை தம் வசம் வைத்துக்கொண்டு சில எடுபிடி அரசியல்வாதி களைப்பயன்படுத்தி தென்னிலங்கை அரசு தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
காவலரண்களை திடீரென அகற்றி  அவற்றைப் புள்ளிவிவரங்களாக வெளிப்படுத் துவதன் மூலம் நல்லிணக்க ஆணைக் குழுவின் தாம் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருப்பதாக அரசு ஐ.நா சபையில் கணக்குக்காட்ட முயற்சிக்கின்றது.

இதன் மூலம் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது உலக நாடுகளால் சுட்டிக்காட்டக்கூடிய கேள்வி எழுப்பக்கூடிய விடயங்கள் குறித்து அரசு தமது தரப்பு நியாயங்களை முன் வைப்பதற்கான ஆதாரங்களை திரட்டி வருவது என்பது தெளிவாகிறது.

எப்படி இருந்தா போதும் வடக்கு கிழக்கு பகுதியில் இராணுவப் பிரசன்னத்தை குறைப் பதற்கோ இலங்கை அரசு ஒரு போதும் மனப்பூர்வமாக தலையசைக்க போவதில்லை என்பதும் வேறும் சில காரணங்களை பயன்படுத்தி இராணுவத்தினரின் தலையீட்டைப் பேணுவதற்கும் அரசு தந்திரங்களை வகுத்துக் கொண்டு இருக்கிறது. அதுவே இப்போதைக்கு வாள்வெட்டு கும்பலை உருவாக்கிக் இருக்கிறதா என்ற சந்கேத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


நன்றி சூரியகாந்தி(19.01.2014)
http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8810955319128483


Post Comment

கருத்துகள் இல்லை: