சனி, ஜனவரி 14, 2012

நோய் மீதே வாழ்வு


இறுதிப்போர் முடிந்து மூன்று வருடங்களை எட்டும் நிலையில் வன்னியில் புதிய வடிவங்களில் மக்கள் வாழ்க்கையுடன் போரட வேண்டியவர்களாகவே இன்னமும் இருக்கின்றனர். வாழ்வியல் ரீதியாக இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறுவகையான நெருக்கடிகள், இருப்புக்கான கேள்விக்குறிகளை ஏற்படுத்திவருகின்றன. போரின் கோர முகங்களை மறந்து புதியவாழ்வுக்குள் நுழைய எத்தனிக்கும் ஒரு சமூகத்துக்கு, அதிலிருந்து மீள முடியாத அளவுக்கு அரசின் அபிவிருத்திப் பணிகள் இருக்கின்றன.

இன விடுதலைக்காகப் போராடிய அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களும் திட்டமிட்டு பழிவாங்கப்படும் சூழலில் வாழவேண்டியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். போரின்போது உறவுகள்,உடமைகளை இழந்து உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வன்மப்பிடியிலிருந்து எங்களை விட்டுவிடுங்கள் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்கின்றனர்.
போரின்போது மக்கள் எதிர்கொண்ட நிலைமைகள் இப்போது அவர்களுக்குத் தாக்கத்தைக் கொடுத்துவருகின்றன. குறிப்பாக இடவசதி,போதிய காற்றோட்டம்,சுத்தமான குடிதண்ணீர்,சுகாதாரமான கழிப்பறைவசதி,போசாக்கான உணவு போன்ற அடிப்படை தேவைகள் இறுதிபோர் நடைபெற்றபோது மக்களுக்குக் கிடைக்கவில்லை.
போரின்போது கொல்லப்பட்டவர்களின் உடலங்களைச் சுகாதாரமான முறையில் அடக்கம் செய்ய மக்களுக்கு அவகாசம் இருக்கவில்லை. தமக்குமுன்னால் இறந்தவர்களை உறவுகள் தாம் இருந்த பங்கருக்குள் போட்டு மூடிவிட்டு வேறு இடத்துக்கு நகர்வது மட்டுமே இயலுமான ஒன்றாக அப்போது இருந்தது. கைவிடப்பட்ட உடலங்களை காகங்களும் நாய்களும் உண்ணவேண்டி ஏற்பட்டது. அழுகிய உடல்களின் நாற்றமும், நச்சுகுண்டுகளின் புகைகளும் மக்களின் சுவாசமாக மாறின.
வன்னிப்போரில் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களான கிளஸ்ட்டர் குண்டுகளும்,நச்சுக்குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.
போரில் இருந்து மீண்டு நலன்புரி முகாம்களுக்கு சென்ற மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர். போர்முடிந்து மக்கள் மீளக்குடியமர்ந்துள்ளநிலையில் இப்போது புதிய நோய்கள் பரவ ஆரம்பித்து மக்களை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளியள்ளன.
ஏற்கனவே தொற்றுநோய்கள்,ஆபத்தான நோய்கள் பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டப்பட்டது. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்களுக்குக் காசநோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது வைத்திய அரிக்கைகளில் புலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு வகைக் காய்ச்சலினால் கடந்த இரு வாரஙகளில்(01.01.2012)மட்டும் ஏழு பேர் மரணமாகியதுடன், இருவர் யாழ்.போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டனர். சுவாசத்துடன் தொடர்புபடும் இந்த காய்ச்சல் சகல வயதினரையும் தாக்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அல்லது மூன்று நாள் காய்ச்சலுடனேயே இந்த மரணம் நிகழ்வதால் காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே வைத்தியர்களை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வன்னியில் உள்ள பல மருத்துவமனைகள் போதிய அடிப்படைவசதிகள் இன்றியே இயங்கிவருகின்றன. இதனால் அந்த மருத்துவமனைகளில் மக்கள் சாதாரண காய்ச்சலுக்கு கூட மருந்தைப் பெறுவது சிரமமாக உள்ளது. இவ்வாறான நெருக்கடிகளுக்குள் மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தொடர்ந்தும் போராடவேண்டியுள்ளது.
நன்றி் உதயன்,சூரியகாந்தி-(08.01.2012)

Post Comment

கருத்துகள் இல்லை: