ஞாயிறு, ஏப்ரல் 05, 2015

விமானத்தில் பொருத்தப்படும் கறுப்புப் பெட்டி

விமான விபத்துக்களின் போது விசாரணைப்பிரிவினர் மிகவும் அவசரமாகத் தேடுவது இந்த கறுப்புப் பெட்டியைத் தான்.

கறுப்புப் பெட்டி என்றால் என்ன?


கறுப்புப் பெட்டி என்பது ஒரு விமானத்தின் பறப்பின்போது நடக்கும் அனைத்தையும் பதிவு செய்யும் கருவியாகும்.

பயணிகள் போக்குவரத்து விமானங்களில் இந்தக் கறுப்புப் பெட்டிகள் இரண்டு பொருத்தப்பட்டிருக்கும். விபத்தில் மிகவும் குறைவாகச் சேதமடையும் பகுதியான விமானத்தின் வால்ப்பகுதியிலேயே இவை பொருத்தப்பட்டிருக்கும்.

விமானத்தின் விமானிகள் பகுதியிலிருந்து இயந்திரங்கள்,  இறக்கைகள் போன்ற முக்கியபகுதிகளில் ஏற்படும் மாற்றங்களும் செயற்பாடுகளும் இதில் பதிவு செய்யப்படும்.


 உண்மையில் கறுப்புப் பெட்டி என்பது கறுப்பு நிறத்திலான பெட்டி அல்ல. அது செம்மஞ்சள் நிறமான ஒரேஞ்ச் பெட்டியேயாகும்.  முதல் முதலில் உபயோகிக்கப்பட்ட பெட்டிகள் புகைப்படக் கடதாசியை உள்ளடக்கி அதில் பதிவுகள் செய்யப்பட்டதால், அவை கறுப்பு நிறத்தில் இருந்தன. ஆனால் அதன் பின்னர் நவீனமயப்படுத்தப்பட்ட பெட்டிகள் ஒரேஞ்ச் நிறத்தில் செய்யப்பட்டன. இந்த நிறம்விபத்துப் பகுதிகளில் எவ்வளவு தூரத்திலிருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் காட்டிக்கொள்ளும்.

இரண்டு கறுப்புப் பெட்டிகளும் வித்தியாசமான பதிவுகளை மேற்கொள்கின்றன.

இதில் முதலாவது  CVR (Cockpit Voice Recorder) எனப்படுகின்றது. இது குரல் மற்றும் விமானத்தின் ஒலி, ஒலிப்பதிவுகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்யும். இரண்டுமணிநேரப் பதிவுகள் தொடர்ந்து ஒரு சுழற்சி முறையில் பதிவு செய்யப்படும். இது விமானிகள் பகுதியில் நடக்கும் அத்தனை உரையாடல்களையும் பதிவு செய்யும்.

இரண்டாவது பெட்டி,  DFDR (Digital Flight Data Recorder) எனப்படும். இது விமானத்தின் தொழில்நுட்பத் தரவுகளைப் பதிவு செய்யும். இது தொடர்ச்சியாக 25 மணிநேரப் பதிவுகளை மேற்கொள்ளும். விமானங்களின் வகைகளைப் பொறுத்து இந்தத் தொழில்நுட்பத் தரவுகள் 28 இலிருந்து 13000 தரவுகளிற்கிடையில் வேறுபடும். வேகம், பறப்புயரம், இயந்திரத்தின் நிலை, தானியங்கி விமானி நிலை போன்ற தரவுகளோடு மற்றைய தொழில்நுட்பத் தரவுகளும்பதிவு செய்யப்படும்.


இந்த CVR மற்றும் DFDR தரவுகள் ஓவ்வொன்றும் தனித்தனியாக அவற்றிற்கான, விபத்திலும் அழிக்கப்படாத ஒரு பதிவு நினைவகமான CSMU (Crash-Survivable Memory Unit) இல் பதிவு செய்யப்படுகின்றன. இவை முழுமையான தரவுகளின் தொகுப்புகளைத் தனக்குள் பாதுகாப்பாகப் பேணும்.


இந்த அடிப்படையில் பெறப்படும் தரவுகள், இரட்டை இலக்கக் கணினித் தரவாக (Binaire) பதிவு செய்யப்படும். இவை அதற்குரிய முறைப்படி, தரவு மாற்றப்படல் (Décodé) வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவுகளில் விமானத்தில் ஏற்படுத்தப்படும் அபாய அறிவிப்புக்கள். இயந்திரம் அல்லது இலத்திரனியற் கட்டுப்பாடுகள் விடுக்கும் அறிவிப்புக்கள், மற்றும் முக்கியமாக விமானத்தின் வெளிப்பகுதியில் ஏற்படும் சத்தங்கள், உதாரணமாகப் புயற்காற்று, அல்லது விமான இறக்கைளில் ஏற்படும் சத்தங்கள் என்பன நேரடியாகக் கண்டறியப்படும்.


இந்தத் தரவுகளின் தொகுப்போடு ஒரு விமானத்தின் விபத்திற்குரிய காரணங்கள் முற்றாகக் கண்டறியப்படும். இதற்காகவே இந்தக் கறுப்புப் பெட்டிகள் முக்கியமாகத் தேடப்டுகின்றன.
 

Post Comment

கருத்துகள் இல்லை: