புதன், செப்டம்பர் 10, 2014

அம்மாவின் மத்து!



கரு நிறத்தில்
வயதே தெரியாத மத்து!

உறிமேலே வாய் அகன்ற பானை
அதனுள் நேற்றயபால் தயிராய்!

இன்றும் காலை கறந்தபால்
காச்சி தேநீருக்கு செலவளிய
எஞ்சியவை ஆறியதும்
புளியிட்டு மூடப்படுகின்றன தயிருக்காய்!

சேர்ந்து புளித்துபோன தயிர்
மத்தோடு மாய்கிறது மறுநாள்!

அம்மாவின் கைகள் மரத்துப்போயின - எனினும்
வெண்ணெய் திரண்டு கைவலியை
போக்கவே அழகிய தாச்சி நிரம்புகிறது
வெண்ணெய் திரளால்!

நெய்யாக இன்னும் வேலையிருக்கிறது

முருங்கை இலையின் அலக்கொன்று
நெய்யின் பிறப்பை சிபாரிசு செய்ய
படிப்படியாய் சேர்க்கப்பட்ட போத்தல் நிரம்புகிறது!

பொன்மஞ்சல் நிறத்தில் பசுதந்த நெய்
பனிக்காலப் பொழுதில் உறைந்துகிடக்கிறது!

எண்ணமெல்லாம் அந்த நினைவுகள்!
இனியும் வந்திடுமோ இந்த உணர்வுகள்?

வீட்டின் செல்வங்களான கறுப்பியும் சிவப்பியும்
இப்போது காமினியின் பட்டியில்!

தேடியலைந்த அம்மாவின் நினைவோ
முள்ளிவாய்காலில் தவறவிட்ட மத்தோடு
மாக்களாய் பரிதவிக்க,
எஞ்சிய ஒரு கன்று அம்மாவாகியிருக்கிறது!

அது ஈன்ற கன்று எங்கள்வீட்டு செல்வம்!
நாங்களும் செல்வந்தராகியிருக்கிறோம்!- ஆனால்
அம்மா இப்போதும் ஏழையாய் இருக்கிறாள்
கறுப்பியையும் சிவப்பியையும் எண்ணியபடி!

Post Comment

கருத்துகள் இல்லை: