
மன்னாரின் விளை நிலங்களிலிருந்து
மூட்டைகளை கட்டிய சனங்கள்
கால்மடித்து இன்னும் இருக்கவில்லை
மர நிழல்களில் தஞ்சம் புகும்போதெல்லாம்
மடிகளில் வந்து விழும் குண்டுகளால்
சிதைந்த உடல்களை கொண்டு
மாட்டு வண்டில்கள் புறப்பட்டன
முறிப்பு கோணாவில் என்று வந்து
பருவகால மின்மினி பூச்சிகளைப்போல்
குப்பி விளக்குகளை மிளிரவிட்டு
கூடாரத்தில் வாழ்ந்த சனங்கள்
ஏறிகணைகளால் எடுத்து வீசப்பட்டனர்
குப்பைகளுக்குள்
சுமைகளை சுமந்த சனங்கள்
வருட காலமாய் கிளிநொச்சியையும்
தாண்டி வசந்தகால வண்ணத்து
பூச்சிகளாய் படை எடுத்தனர் வயல்
நிலங்களுக்குள் நடக்கும் பிணங்களாய்!
பல தலைகள் கொண்ட நாகங்கள்
தலைகளை நீட்டி விஷ எச்சங்களை
வீசின மழைபோல் நனைந்துகொணடனர்
இரையான பாவிகள் குருதியில்
குழல்களுக்குள் இருந்து புறப்பட்ட
குற்றிகள் சனங்கள் செல்லும்
பாதைகளை ஊடறுத்தன சிதறியபடி
விஞ்ஞான அறையில் அற்பமாய்
இருந்த பொஸ்பரஸ் கலவைகள்
பெரிய இரும்பு போத்தல்களில்
வழங்கப்பட்டன மாணவர்களுக்கு
எடுத்துக்கொண்டு புறப்பட்டன
அவசர வண்டிகள் எரிந்த
உடல்களை மருத்துவமனைக்கு
அப்போதுதான் தேடிக்கொண்டிருந்தார்
மருத்துவர் தீர்ந்த மருந்து போத்தல்களை
Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக